78. தீச் சார்பால் நன்மை இழப்பு

ஆனை தண்ணீரில்நிழல் பார்த்திடத் தவளைசென்று
     அங்கே கலக்கிஉலவும்;
  ஆயிரம்பேர் கூடி வீடு கட்டிடில்ஏதம்
     அறைகுறளும் உடனேவரும்;
ஏனைநல் பெரியோர்கள் போசனம் செயும்அளவில்
     ஈக்கிடந்து இசைகேடதாம்;
  இன்பமிகு பசுவிலே கன்றுசென்று ஊட்டுதற்கு
     இனியகோன் அதுதடுக்கும்;
சேனைமன் னவர்என்ன கருமம் நியமிக்கினும்
     சிறியோர்க ளால்குறைபடும்;
  சிங்கத்தையும் பெரிய இடபத்தையும் பகைமை
     செய்ததுஒரு நரிஅல்லவோ?
மானையும் திகழ்தெய்வயானையும் தழுவுமணி
     மார்பனே! அருளாளனே!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை