79. இடுக்கண் உற்றும் பயன்படுபவை

ஆறு தண்ணீர்வற்றி விட்டாலும் ஊற்றுநீர்
     அமுதபானம் கொடுக்கும்;
  ஆதவனை ஒருபாதி கட்செவி மறைத்தாலும்
     அப்போதும் உதவிசெய்வன்;
கூறுமதி தேய்பிறையது ஆகவே குறையினும்
     குவலயத்து இருள்சிதைக்கும்;
  கொல்லைதான் சாவிபோய் விட்டாலும் அங்குவரு
     குருவிக்கு மேய்ச்சல்உண்டு
வீறுடன் உதாரிதான் மிடியானபோதினிலும்
     மிக நாடிவருபவர்க்கு
  வேறுவகை இல்லைஎன்று உரையாது இயன்றன
     வியந்துஉளம் மகிழ்ந்துஉதவுவான்;
மாறுபடு சூரசங்கார, கம்பீரனே!
     வடிவேல் அணிந்தமுருகா!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை