83. நற்புலவர் தீப்புலவர் செயல்

மிக்கான சோலையில் குயில்சென்று மாங்கனி
     விருப்பமொடு தேடிநாடும்;
  மிடைகருங் காகங்கள் எக்கனி இருந்தாலும்
     வேப்பங் கனிக்குநாடும்;
எக்காலும் வரிவண்டு பங்கேருகத்தினில்
     இருக்கின்ற தேனைநாடும்;
  எத்தனை சுகந்தவகை உற்றாலும் உருள்வண்டு
     இனம்துர்மலத்தை நாடும்;
தக்கோர் பொருட்சுவை நயங்கள் எங்கேஎன்று
     தாம்பார்த்து உகந்துகொள்வார்
  தாழ்வான வன்கண்ணர் குற்றம் எங்கேஎன்று
     தமிழில் ஆராய்வர்கண்டாய்
மைக்காவி விழிமாது தெய்வானையும் குறவர்
     வள்ளியும் தழுவு தலைவா!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை