89. இன்ன உறுப்புக்களால் பயன்இல்லை

தேவாலயம் சுற்றிடாத கால் என்னகால்?
     தெரிசியாக் கண்என்னகண்?
  தினமுமே நின்கமல பாதத்தை நினையாத
     சிந்தைதான் என்னசிந்தை?
மேவுஆகம் சிவ புராணமம் அவை கேளாமல்
     விட்டசெவி என்ன செவிகள்?
  விமலனை வணங்காத சென்னி என்சென்னி பணி?
     விடைசெயாக்கை என்னகை?
நாவார நினை ஏத்திடாதவாய் என்னவாய்?
     நல்தீர்த்தம் மூழ்காஉடல்
  நானிலத்து என்னஉடல் பாவியாகிய சனனம்
     நண்ணினால் பலன்ஏதுகாண்
மாஆகி வேலைதனில் வருசூரன் மார்புஉருவ
     வடிவேலை விட்டமுருகா!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை