95. தகாத செயல்கள்
அண்டிவரும் உற்றார்
பசித்துஅங்கு இருக்கவே
அன்னியர்க்கு உதவுவோரும்;
ஆசுதபு பெரியோர்செய் நேசத்தை விட்டுப்பின்
அற்பரை அடுத்தபேரும்;
கொண்டஒரு மனையாள் இருக்கப் பரத்தையைக்
கொண்டாடி மருவுவோரும்;
கூறு சற்பாத்திரம் இருக்கமிகு தானமது
குணம்இலார்க்கு ஈந்தபேரும்
கண்டுவரு புதியோரை நம்பியே பழையோரைக்
கைவிட்டு இருந்தபேரும்
கரிவாலை விட்டு நரிவால்பற்றி நதிநீர்
கடக்கின்ற மரியாதைகாண்
வண்டுஅடர் கடப்பமலர் மாலிகாபரணம்அணி
மார்பனே! அருளாளனே!
மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
|