1-10 வரை
 

   1. முருகன் திருவிளையாடல்

பூமிக்குஓர் ஆறுதலையாய்வந்து சரவணப்
     பொய்கைதனில் விளையாடியும்,
  புனிதற்கு மந்த்ரஉபதேசமொழி சொல்லியும்
     போதனைச் சிறையில் வைத்தும்,
தேமிக்க அரிஅரப் பிரமாதி கட்கும்
     செகுக்கமுடியாஅசுரனைத்
  தேகம் கிழித்து வடிவேலினால் இருகூறு
     செய்துஅமரர் சிறைதவிர்த்தும்,
நேமிக்குள் அன்பர்இடர் உற்ற சமயந்தனில்
     நினைக்குமுன் வந்து உதவியும்,
  நிதமும் மெய்த் துணையாய் விளங்கலால் உலகில்உனை
     நிகரான தெய்வம் உண்டோ
மாமிக்க தேன்பருகு பூங்கடம்பு அணியும்மணி
     மார்பனே ! வள்ளிகணவா !
  மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை
   

    2. அந்தணர் இயல்பு

குறையாத காயத்ரி ஆதி செபமகிமையும்,
     கூறு சுருதிப்பெருமையும்,
  கோதிலா ஆகம புராணத்தின் வளமையும்,
     குலவுயாக ஆதிபலவும்,
முறையாய் நடத்தலால் சகல தீவினைகளையும்
     முளரிபோலே தகிப்பார்
  முதன்மைபெறு சிலைசெம்பு பிரிதிவிகளில்தெய்வ
     மூர்த்தம் உண்டாக்குவிப்பார்
நிறையாக நீதிநெறி வழுவார்கள் ஆகையால்,
     நீள்மழை பொழிந்திடுவதும்,
  நிலமது செழிப்பதும், அரசர் செங்கோல்புரியும்
     நிலையும், மாதவர் செய்தவமும்,
மறையோர்களாலே விளங்கும் இவ்உலகத்தின்
     மானிடத் தெய்வம்இவர் காண்
  மயில்ஏறி விளையாடு குகனே!புல்வயல் நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

        3. அரசர் இயல்பு

குடிபடையில் அபிமானம், மந்திர ஆலோசனை,
     குறிப்பு அறிதல், சத்யவசனம்,
  கொடைநித்தம் அவர்அவர்க்கு ஏற்றமரியாதை பொறை,
     கோடாத சதுர்உபாயம்
படிவிசாரணையொடு ப்ரதானி தளகர்த்தரைப்
     பண்புஅறிந்தே அமைத்தல்,
  பல்லுயிர் எலாம் தன்உயிர்க்கு நிகர் என்றே
     பரித்தல், குற்றங்கள் களைதல்,
துடிபெறு தனக்கு உறுதியான நட்பகம் இன்மை,
     சுகுணமொடு, கல்வி அறிவு,
  தோலாத காலம்இடம் அறிதல், வினை வலிகண்டு
     துட்ட நிக்ரக சௌரியம்,
வடிவுபெறு செங்கோல் நடத்திவரும் அரசர்க்கு
     வழுவாத முறைமை இதுகாண்
  மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

       4. வணிகர் இயல்பு

கொண்டபடி போலும்விலை பேசி,லாபம்சிறிது
     கூடிவர நயம்உரைப்பார்;
  கொள்ளும் ஒரு முதலுக்கு மோசம் வராதபடி
     குறுகவே செலவுசெய்வார்;
வண்டப் புரட்டர் தாம் முறிதந்து, பொன் அடகு
     வைக்கினும் கடன் ஈந்திடார்;
  மருவும் நாணயம் உளோர் கேட்டுஅனுப்புகினும் அவர்
     வார்த்தையில் எலாம்கொடுப்பார்;
கண்டுஎழுது பற்றுவரவினில் மயிர் பிளந்தே
     கணக்கில் அணுவாகிலும் விடார்;
  காசு வீணில் செலவிடார் உசிதமானதில்
     கனதிரவியங்கள் விடுவார்;
மண்டலத்து ஊடுகன வர்த்தகம் செய்கின்ற
     வணிகர்க்கு முறைமை இதுகாண்
  மயில்ஏறி விளையாடு குகனே! புல்வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

     5. வேளாளர் இயல்பு

நல்ல தேவாலயம் பூசனை நடப்பதும்,
     நாள்தோறும் மழை பொழிவதும்,
  நாடிய தபோதனர்கள் மாதவம் புரிவதும்,
     நவில்வேத வேதியர் எலாம்
சொல்அரிய யாக ஆதி கருமங்கள் செய்வதும்,
     தொல்புவி செழிக்கும்நலமும்,
  சுப சோபனங்களும், கொற்றவர்கள் செங்கோல்
     துலங்கு மனுநெறி முறைமையும்,
வெல்அரிய சுகிர்தமொடு வர்த்தகர் கொள்விலையும்
     விற்பனையும், அதிக புகழும்,
  மிக்க அதிகாரமும், தொழிலாளர் சீவனமும்,
     வீர ரண சூரர்வலியும்,
வல்லமைகள் சகலமும், வேளாளர் மேழியின்
     வாழ்வினால் விளைவ அன்றோ?
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

        6. பிதாக்கள்

தவமது செய்தேபெற்று எடுத்தவன் முதல்பிதா,
     தனைவளர்த்தவன் ஒரு பிதா,
  தயையாக வித்தையைச் சாற்றினவன் ஒருபிதா,
     சார்ந்த சற்குரு ஒருபிதா,
அவம் அறுத்து ஆள்கின்ற அரசு ஒருபிதா, நல்ல
     ஆபத்து வேளை தன்னில்
  அஞ்சல்என்று உற்றதுயர் தீர்த்துளோன் ஒருபிதா,
     அன்புள முனோன் ஒருபிதா,
கவளம்இடு மனைவியைப் பெற்றுளோன் ஒருபிதா,
     கலிதவிர்த்தவன் ஒருபிதா,
  காசினியில் இவரை நித்தம்பிதா என்றுஉளம்
     கருதுவது நீதியாகும்
மவுலிதனில் மதிஅரவு புனைவிமலர் உதவுசிறு
     மதலைஎன வருகுருபரா!
  மயில்ஏறி விளையாடு குகனே! புல்வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

 7. ஒன்றை ஒன்று பற்றியிருப்பவை

சத்தியம் தவறாது இருப்பவர் இடத்தினில்
     சார்ந்து திருமாது இருக்கும்;
  சந்ததம் திருமாது இருக்கும் இடந்தனில்
     தனது பாக்கியம் இருக்கும்;
மெய்த்துவரு பாக்கியம் இருக்கும் இடந்தனில்
     விண்டுவின் களைஇருக்கும்;
  விண்டுவின் களைபூண்டு இருக்கும் இடந்தனில்
     மிக்கான தயைஇருக்கும்;
பத்தியுடன் இனியதயை உள்ளவர் இடந்தனில்
     பகர்தருமம் மிகஇருக்கும்;
  பகர்தருமம் உள்ளவர் இடந்தனில் சத்துரு
     பலாயனத் திறல்இருக்கும்;
வைத்திசை மிகுந்ததிறல் உள்ளவர் இடத்தில்வெகு
     மன்உயிர் சிறக்கும் அன்றோ?
  மயில்ஏறி விளையாடு குகனே! புல்வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

    8. இவர்க்கு இவர் தெய்வம் எனல்

ஆதுலர்க்கு அன்னம் கொடுத்தவர்களே தெய்வம்;
     அன்பான மாணாக்கருக்கு
  அரியகுருவே தெய்வம் அஞ்சினோர்க்கு ஆபத்து
     அகற்றினோனே தெய்வமாம்;
காதல்உறு கற்புடைய மங்கையர் தமக்குஎலாம்
     கணவனே மிக்கதெய்வம்
  காசினியில் மன்உயிர் தமக்குஎலாம் குடிமரபு
     காக்கும்மன்னவர் தெய்வமாம்
ஓதுஅரிய பிள்ளைகட்கு அன்னை தந்தையர் தெய்வம்
     உயர்சாதி மாந்தர்யார்க்கும்
  உறவின்முறையார் தெய்வம் விசுவாசம் உள்ள பேர்க்கு
     உற்றசிவபக்தர் தெய்வம்
மா தயையினால் சூர் தடிந்துஅருள் புரிந்ததால்
     வானவர்க்குத் தெய்வம் நீ
  மயில்ஏறி விளையாடு குகனே! புல்வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை
   

   9. இவர்க்கு இதில் நினைவு எனல்

ஞான நெறியாளர்க்கு மோட்சத்திலே நினைவு
     நல்லறிவு உளோர்தமக்கு
  நாள்தோறும் தருமத்திலே நினைவு மன்னர்க்கு
     இராச்சியம் தன்னில்நினைவு
ஆனகாமுகருக்கு மாதர்மேலே நினைவு
     அஞ்சாத் திருடருக்குஇங்கு
  அனுதினம் களவிலே நினைவு தனவணிகருக்கு
    ஆதாயமீது நினைவு
தானமிகு குடியாளருக்கு எலாம் வேளாண்மை
     தனில் நினைவு கற்பவர்க்குத்
  தகுகல்விமேல் நினைவு வேசியர்க்கு இனியபொருள்
     தருவோர்கள் மீது நினைவு
மானபரனுக்கு மரியாதைமேல் நினைவுஎற்கு
     மாறாது உன்மீது நினைவு
  மயில்ஏறி விளையாடு குகனே! புல்வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை
   

     10. இவருக்கு இன்னது இல்லை

வேசைக்கு நிசம்இல்லை திருடனுக்கு உறவுஇல்லை
    வேந்தர்க்கு நன்றிஇல்லை
  மிடியர்க்கு விலைமாதர்மீது வங்கணம்இலை
    மிலேச்சற்கு நிறையதுஇல்லை
ஆசைக்கு வெட்கம்இலை ஞானிஆனவனுக்குள்
    அகம்இல்லை மூர்க்கன்தனக்கு
  அன்பில்லை காமிக்கு முறைஇல்லை குணம்இலோர்க்கு
    அழகில்லை சித்தசுத்தன்
பூசைக்கு நவில் அங்க சுத்திஇலை யாவும்உணர்
    புலவனுக்கு அயலோர்இலை
  புல்லனுக்கு என்றுமுசிதான் உசிதம் இல்லைவரு
    புலையற்கு இரக்கமில்லை
மாசைத் தவிர்த்த மதிமுக தெய்வயானையொடு
    வள்ளிக்கு இகிசைந்த அழகா
  மயில்ஏறி விளையாடு குகனே! புல்வயல்நீடு
    மலைமேவு குமரேசனே.

உரை