31-40 வரை
 

       31. இறந்தும் இறவாதவர்

அனைவர்க்கும் உபகாரம்ஆம் வாவி கூவம்உண்
     டாக்கினோர், நீதிமன்னர்
  அழியாத தேவாலயங்கட்டி வைத்துளோர்
     அகரங்கள் செய்தபெரியோர்
தனை ஒப்புஇலாப் புதல்வனைப்பெற்ற பேர்பொருது
     சமர்வென்ற சுத்தவீரர்
  தரணிதனில் நிலைநிற்க எந்நாளும் மாறாத
     தருமங்கள் செய்தபேர்கள்
கனவித்தை கொண்டவர்கள் ஓயாத கொடையாளர்
     காவியம் செய்தகவிஞர்
  கற்பினில் மிகுந்தஒரு பத்தினி மடந்தையைக்
     கடிமணம் செய்தோர்கள்,இம்
மனிதர்கள் சரீரங்கள் போகினும் சாகாத
     மனிதர்இவர் ஆகும்அன்றோ!
  மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை
   

  32. சாகாது இருந்தும் இறந்தோர்

மாறாத வறுமையோர், தீராத பிணியாளர்
     வருவேட்டகத்தில் உண்போர்
  மனைவியை வழங்கியே சீவனம் செய்குவோர்
     மன்னும் ஒருராசசபையில்
தூறாக நிந்தைசெய்து உய்குவோர் சிவிகைகள்
     சுமந்தே பிழைக்கின்றபேர்
  தொலையா விசாரத்து அழுந்துவோர் வார்த்தையில்
     சோர்வுபடல் உற்றபெரியோர்
வீறாக மனையாள் தனக்குஅஞ்சி வந்திடு
     விருந்தினை ஒழித்துவிடுவோர்
  வீம்புடன் செல்லாத விவகாரம் அதுகொண்டு
     மிக்கசபை ஏறும்அசடர்
மாறாக இவர்எலாம் உயிருடன் செத்தசவம்
     ஆகிஒளி மாய்வர்கண்டாய்
  மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை
   

   33. சிறிதும் பயன் அற்றவர்

பதர் ஆகிலும் கன விபூதிவிளை விக்கும்
     பழைமைபெறு சுவர்ஆகிலும்
  பலருக்கும் மறைவாகும் மாடு உரிஞ்சிடுமலம்
     பன்றிகட்கு உபயோகம்ஆம்
கதம்மிகு கடாஎன்னில் உழுதுபுவிகாக்கும் வன்
     கழுதையும் பொதிசுமக்கும்
  கல்எனில் தேவர்களும் ஆலயமும் ஆம்பெருங்
     கான்புற்று அரவமனைஆம்
இதம்இலாச் சவம்ஆகிலும் சிலர்க்கு உதவிசெய்யும்
     இழிவுறு குரங்காயினும்
  இரக்கப் பிடித்தவர்க்கு உதவிசெயும் வாருகோல்
     ஏற்றமாளிகை விளக்கும்
மதம்அது மிகும்பரமலோபரால் உபகாரம்
     மற்றுஒருவருக்கும் உண்டோ?
  மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை
   

     34. ஈயாதவர் இயல்பு

திரவியம் காக்கும்ஒரு பூதங்கள் போல்பணம்
     தேடிப் புதைத்துவைப்பார்
  சீலைநலமாகவும் கட்டார்கள் நல்அமுது
     செய்துஉணார் அறமும்செயார்
புரவலர்செய் தண்டம் தனக்கும்வலுவாகப்
     புகும்திருடருக்கும் ஈவார்
  புலவரைக் கண்டவுடன் ஓடிப் பதுங்குவார்
     புராணிகர்க்கு ஒன்றும்உதவார்
விரகு அறிந் தேபிள்ளை சோறுகறி தினுஅளவில்
     வெகுபணம் செலவுஆகலால்
  விளையாடு கிழவனாம் பிள்ளையே பிள்ளைஎன
     மிகுசெட்டி சொன்னகதைபோல்
வரவுபார்க்கின்றதே அல்லாது லோபியர்கள்
     மற்றொருவருக்கு ஈவரோ?
  மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை
   

35. திருமகள் வாழும் இடங்கள்

கடவாரணத்திலும் கங்கா சலத்திலும்
     கமல ஆசனம்தன்னிலும்
  காகுத்தன் மார்பிலும் கொற்றவர் இடத்திலும்
     காலியின் கூட்டத்திலும்
நடமாடு பரியிலும் பொய்வார்த்தை சொல்லாத
     நல்லோர் இடம்தன்னிலும்
  நல்லசுப லட்சணம் மிகுந்தமனை தன்னிலும்
     ரணசுத்த வீரர்பாலும்
அடர்கேதனத்திலும் சயம்வரந் தன்னிலும்
     அருந்துளசி வில்வத்திலும்
  அலர்தரு கடப்பமலர் தனிலும் இரதத்திலும்
     அதிககுணமான ரூப
மடவார் இடத்திலும் குடிகொண்டு திருமாது
     மாறாது இருப்பள் அன்றோ?
  மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை
   

    36. மூதேவி வாழும் இடங்கள்

சோரமங்கையர்கள் நிசம்உரையார்கள் வாயினில்,
     சூதகப்பெண்கள் நிழலில்
  சூளையில் சூழ்தல் உறுபுகையில் களேபரம்
     சுடுபுகையில் நீசர்நிழலில்
கார்இரவில் அரசுநிழலில் கடா நிழலினொடு
     கருதிய விளக்குநிழலில்
  காமுகரில் நிட்டைஇல்லாதவர் முகத்தினில்
     கடுஞ்சினத்தோர் சபையினில்
ஈரம்இல்லாக் களர்நிலத்தினில் இராத்தயிரில்
     இழியும்மதுபானர் பாலில்
  இலைவேல் விளாநிழலில் நிதம்அழுக்கு அடைமனையில்
     ஏனம்நாய் அசம்கரம்தூள்
வாரிய முறத்தூள் பெருக்குதூள் மூதேவி
     மாறாது இருப்பள்என்பர்
  மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை
   

   37. திருத்தினாலும் திருந்தாதவன்

கட்டிஎரு இட்டுச் செழுந்தேனை வார்க்கினும்
     காஞ்சிரம் கைப்புவிடுமோ?
  கழுதையைக் கட்டிவைத்து ஓமம் வளர்க்கினும்
     கதிபெறும் குதிரைஆமோ?
குட்டிஅரவுக்குஅமுது அளித்தே வளர்க்கினும்
     கொடுவிடம் அலாதுதருமோ?
  குக்கல்நெடு வாலுக்கு மட்டையைக் கட்டினும்
     கோணாமலேநிற்குமோ?
ஒட்டியே குறுணிமை இட்டாலும் நயம்இலா
     யோனிகண் ஆகிவிடுமோ?
  உலவுகன கர்ப்பூர வாடைபல கூட்டினும்
     உள்ளியின் குணம்மாறுமோ?
மட்டிகட்கு ஆயிரம் புத்திசொன்னாலும்அதில்
     மார்க்கமரியாதை வருமோ?
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை
   

       38. குறிப்பு அறிதல்

மனத்தில் கடும்பகை முகத்தினால் அறியலாம்
     மாநிலப் பூடுகள்எலாம்
  மழையினால் அறியலாம் நல்லார் பொலார்தமை
     மக்களால் அறியலாம்
கனம்மருவு சூரரைச் சமரினால் அறியலாம்
     கற்றஒரு வித்துவானைக்
  கல்விப்ர சங்கத்தினால் அறியலாம்குணங்
     களைநடையினால் அறியலாம்
தனதுஅகம் அடுத்தது பளிங்கினால் அறியலாம்
     சாதிசொல்லால் அறியலாம்
  தருநீதி கேள்வியால் அறியலாம் பிணிகளைத்
     தாதுக்களால் அறியலாம்
வனசவிக சிதவதன பரிபூரணானந்த
     வாலவடிவான வேலா
  மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை
   

       39. குணம் மாறாமை

குணம்ஏலாத் துட்டமிருகங்களையும், நயகுணம்
     கொண்டுஉட்படுத்தி விடலாம்
  கொடியபல விடநோய்கள் யாவும்ஒளடதம்அது
     கொடுத்துத் திருப்பிவிடலாம்
உணர்விலாப் பிரமராட்சசுமுதல் பேய்களை
     உகந்துகூத்து ஆட்டிவிடலாம்
  உபாயத்தினால்பெரும் பறவைக்கு நற்புத்தி
     உண்டாக்கலாம்,உயிர்பெறப்
பிணம்அதை எழுப்பலாம் அக்கினி சுடாமல்
     பெரும்புனல் எனச்செய்யலாம்
  பிணியையும் அகற்றலாம் காலதூதுவரையும்
     பின்புவருக என்றுசொலலாம்
மணலையும் கயிறாத் திரிக்கலாம் கயவர்குணம்
     மட்டும் திருப்பவசமோ?
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை
   

     40. மக்களில் விலங்குகள்

தான் பிடித்தது பிடிப்பு என்று மேலவர்புத்தி
     தள்ளிச்செய்வோர் குரங்கு
  சபையில் குறிப்புஅறிய மாட்டாமல் நின்றவர்
     தாம்பயன் இலாதமரமாம்
வீம்பினால் எளியவரை எதிர்பண்ணி நிற்கும்ஒரு
     வெறியர் குரைஞமலிஆவர்
  மிகநாடி வருவோர் முகம்பார்த்திடா,லோபர்
     மேன்மைஇல்லாத கழுதை
சோம்பலொடு பெரியோர் சபைக்குள் படுத்திடும்
     தூங்கலே சண்டிக்கடா
  சூதுடன் அடுத்தோர்க்கு இடுக்கணே செய்திடும்
     துட்டனே கொட்டுதேளாம்
மாம்பழந்தனைவேண்டி அந்நாளில் ஈசனை
     வலமாக வந்தமுருகா
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை