41-50 வரை
 

41. அற்பருக்கு வாழ்வுவரில் குணம் வேறுபடும்

அற்பர்க்கு வாழ்வுசற்று அதிகம் ஆனால்விழிக்கு
     யாவர்உருவும் தோற்றிடா
  அண்டிநின்றே நல்லவார்த்தைகள் உரைத்தாலும்
     அவர்செவிக்கு ஏறிடாது
முன்பட்சம் ஆனபேர் வருகினும் வாரும்என
     மொழியவும் வாய்வராது
  மோதியே வாதப் பிடிப்புவந்தது போல
     முன்காலை அகலவைப்பார்
விற்பனம் மிகுந்தபெரியோர் செய்தி சொன்னாலும்
     வெடுவெடுத்து ஏசிநிற்பார்
  விருதா மகத்துவப் பேயது சவுக்கடி
     விழும்போது தீரும்என்பார்
மல்புயம் தனில்நீப மாலைஅணி லோலனே
     மார்பனே வடிவேலவா
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை
   

42. இன்ன தீங்குஉள்ளோர் இன்ன கிரகம் போல்வர்

அன்னை தந்தையர் புத்தி கேளாத பிள்ளையோ
     அட்டமச்சனி ஆகுவான்
  அஞ்சாமல் எதிர்பேசி நிற்குமனையாள் வாக்கில்
     அங்காரகச் சன்மமாம்
தன்னைமிஞ்சிச்சொன்ன வார்த்தை கேளாஅடிமை
     சந்திராட்டகம் என்னலாம்
  தன்பங்கு தாவென்று சபைஏறு தம்பியோ
     சார்ந்தசன்மச் சூரியன்
நன்நயம் இலாதவஞ்சனைசெய்த தமையன்மூன்
     றாம்இடத் தேவியாம்
  நாடொறும் விரோதம்இடு கொண்டோன் கொடுத்துளோன்
     ராகுகேதுக்கள் எனலாம்
மன்அயனை அன்றுசிறை தனில்இட்டு நம்பற்கு
     மந்திரம் உரைத்தகுருவே
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை
   

      43. நல்லிஞ் சேர்தல்

சந்தன விருட்சத்தை அண்டிநிற்கின்றபல
     தருவும்அவ்வாசனை தரும்
  தங்கமக மேருவை அடுத்திடும் காக்கையும்
     சாயல்பொன் மயமேதரும்
பந்தம்மிகு பாலுடன்வளாவிய தணீரெலாம்
     பால்போல் நிறங்கொடுக்கும்
  படிகமணிகட்குளே நிற்கின்ற வடமுமப்
     படியே குணங்கொடுக்கும்
அந்தமிகு மரகதக் கல்லைத் தரித்திடில்
     அடுத்ததும் பசுமையாகும்
  ஆனபெரியோர்களொடு சகவாசம் அதுசெயின்
     அவர்கள்குணம் வருமென்பர்காண்
மந்தர நெடுங்கிரியின் முன்கடல் கடைந்தஅரி
     மருகமெய்ஞ் ஞானமுருகா
  மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை
   

  44. வலியோரையும் ஊழ்விடாது

அன்றுமுடி சூடுவது இருக்க,ரகு ராமன்முன்
     அருங்காடு அடைந்ததுஎன்ன
  அண்டர்எல்லாம் அமிர்தம் உண்டிடப் பரமனுக்கு
     ஆலம் லபித்ததுஎன்ன?
வென்றிவரு தேவர்சிறை மீட்டநீ களவில்வே
     டிச்சியை சேர்ந்ததுஎன்ன?
  மேதினி படைக்கும் அயனுக்குஒரு சிரம்போகி
     வெஞ்சிறையில் உற்றதுஎன்ன
என்றும்ஒரு பொய்சொலா மன்னவன் விலைபோனது
     என்னகாண் வல்லமையினால்
  எண்ணத்தினால் ஒன்றும் வாராது பரமசிவன்
     எத்தனப் படிமுடியுமாம்
மன்றுதனில் நடனம்இடு கங்காதரன் பெற்ற
     வரபுத்ர வடிவேலவா
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

 45. பெரியோர் சொற்படி நடந்தவர்

தந்தைதாய் வாக்ய பரிபாலனம் செய்தவன்
     தசரத குமாரராமன்
  தமையன்அருள் வாக்கிய பரிபாலனம் செய்தோர்கள்
     தருமனுக்கு இளைய நால்வர்
சிந்தையில் உணர்ந்து குருவாக்ய பரிபாலனம்
     செய்தவன் அரிச்சந்திரன்
  தேகிஎன்றோர்க்கு இல்லை எனா வாக்யபாலனம்
     செய்தவன் தான கன்னன்
நிந்தை தவிர் வாக்யபரிபாலனம் செய்தவன்
     நீள்பலம் மிகுந்த அனுமான்
  நிறைவுடன் பத்தாவின் வாக்ய பரிபாலனம்
     நிலத்தினில் நளாயினிசெய்தாள்
மந்தைவழி கோயில் குளமும்குலவு தும்பிமுகன்
     மகிழ்தர உகந்ததுணைவா
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

  46. முயற்சியின் மிக்கது ஊழ்

வங்காளம் ஏறுகினும் வாருகோல் ஒருகாசு
     மட்டன்றி அதிகம்ஆமோ?
  வான்ஏறி உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி
     வண்ணப் பருந்துஆகுமோ?
கங்கா சலம்தன்னில் மூழ்கினும் பேய்ச்சுரைக்
     காய்நல்ல சுரைஆகுமோ
  கடலுக்குள் நாழியை அமுக்கியே மொண்டிடின்
     காணுமோ நால்நாழிதான்
ஐங்காதம் ஓடினும் தன்பாவம் தன்னோடே
     அடையாமல் நீங்கிவிடுமோ?
  ஆரிடம் சென்றாலும் வெகுதொலைவு சுற்றினும்
     அமைத்தபடி அன்றிவருமோ.?
மங்காத செந்தமிழ் கொண்டு நக்கீரர்க்கு
     வந்ததுயர் தீர்த்தமுருகா
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை
   

 47. தீயசெயலால் அழிவு நேரும்

சூரபது மன்பலமும் இராவணன் தீரமும்
     துடுக்கான கஞ்சன்வலியும்
  துடியான இரணியன் வரப்ரசாதங்களும்
     தொலையாத வாலி திடமும்
பாரமிகு துரியோதன் ஆதி நூற்றுவர் அது
     பராக்ரமும் மதுகைடவர்
  பாரிப்பும் மாவலிதன் ஆண்மையும் சோமுகன்
     பங்கில்உறு வல்லமைகளும்
ஏரணவு கீசகன் கனதையும் திரிபுரரின்
     எண்ணமும் தக்கன் எழிலும்
  இவர்களது சம்பத்தும் நின்றவோ? அவர்அவர்
     இடும்பால் அழிந்த அன்றோ?
மாரனைக் கண்ணால் எரித்துஅருள் சிவன்தந்த
     வரபுத்ர வடிவேலவா!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை
   

     48. நல்லோர் நட்பு நிலை

மாமதியில் முயலானது அதுதேயவும் தேய்ந்து
     வளரும்அப் போதுவளரும்
  வாவிதனில் ஆம்பல்கொட்டிகள் அதனில் நீர்வற்றில்
     வற்றிடும் பெருகில்உயரும்
பூமருவு புதல்பூடு கோடையில் தீய்ந்திடும்
     பொங்குகாலம் தழைக்கும்
  புண்டரிகம் இரவிபோம் அளவில் குவிந்திடும்
     போது உதயம் ஆகில்மலரும்
தேமுடல் இளைக்கில்உயிர் கூடவும் இளைக்கும்அது
     தேறில் உயிரும்சிறக்கும்
  சேர்ந்தோர்க்கு இடுக்கண்அது வந்தாலும் நல்லோர்
     சிநேகம் அப்படிஆகுமே
வாமன சொரூப,மத யானை முகனுக்குஇளைய
     வாலகுருபர, வேலவா!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை
   

       49. பயன்தரும்

பருவத்திலே பெற்ற சேயும், புரட்டாசி
     பாதிசம்பா நடுகையும்
  பலம்இனிய ஆடிதனில் ஆனைவால் போலவே
     பயிர்கொண்டு வருகரும்பும்
கருணையொடு மிக்கநாணயம் உளோர் கையினில்
     கடன்இட்டு வைத்தமுதலும்
  காலம்அது நேரில் தனக்கு உறுதியாகமுன்
     கற்று உணர்ந்திடுகல்வியும்
விருதரசரைக் கண்டு பழகிய சிநேகமும்
     விவேகிகட்கு உபகாரமும்
  வீண் அல்ல இவையெலாம் கைப்பலன், தாகஅபி
     விர்த்தியாய் வரும்என்பர்காண்
மருஉலாவியநீப மாலையும் தண் தரள
     மாலையும் புனை மார்பனே
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை
   

   50. சமயத்துக்கு உதவாதவை

கல்லாது புத்தகம்தனில் எழுதி வீட்டினில்
     கட்டிவைத்திடு கல்வியும்
  காலங்களுக்கு உதவவேண்டும் என்று அன்னியன்
     கையில் கொடுத்தபொருளும்
இல்லாளை நீங்கியே பிறர்பாரிசதம் என்று
     இருக்கின்ற குடிவாழ்க்கையும்
  ஏறுமாறாகவே தேசாந்தரம் போய்
     இருக்கின்ற பிள்ளை வாழ்வும்
சொல்ஆனது ஒன்றும்அவர்மனம்ஆனது ஒன்றுமாச்
     சொல்லும் வஞ்சகர்நே சமும்
  சுகியமாய் உண்டுஎன்று இருப்பது எல்லாம்தருண
     துரிதத்தில் உதவாது, காண்
வல்ஆன கொங்கைமடமாது தெய்வானைகுற
     வள்ளி பங்காளநேயா!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை