51-60 வரை
 

       51. திரும்பமாட்டாதவை

ஆடுஅரவின் வாயினில் அகப்பட்ட தவளையும்
     ஆனைவாயில் கரும்பும்
  அரிதான கப்பலில் பாய்மரக் காற்றினில்
     அகப்பட்டு மெலிகாக்கையும்
நாடுஅறியவே, தாரைவார்த்துக் கொடுத்ததும்
     நமன் கைக்குள் ஆனஉயிரும்
  நலமாகவே அணை கடந்திட்ட வெள்ளமும்
     நாய்வேட்டை பட்டமுயலும்
தேடி உண்பார்கைக்குள் ஆனபல உடைமையும்
     தீவாதை யானமனையும்
  திரள்கொடுங்கோல் அரசர் கைக்குஏறு பொருளும்
     திரும்பிவாரா என்பர்காண்
மாடமிசை அன்னக் கொடித்திரள்கொள் சோணாடு
     வாழ வந்திடுமுதல்வனே!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை
   

  52. இதனினும் இது நன்று என்பவை

கடுகடுத்து ஆயிரம் செய்குவதில் இன்சொலால்
     களிகொண்டு அழைத்தல்நன்று
  கனவேள்வி ஆயிரம் செய்வதில் பொய்உரை
     கருத்தொடு சொலாமைநன்று
வெடுவெடுக்கின்றது ஓர் அவிவேகி உறவினில்
     வீணரொடு பகைமைநன்று
  வெகுமதிகள் ஆயிரம் செய்வதின் அரைக்காசு
     வேளைகண்டு உதவல்நன்று
சடுதியில் பக்குவம் சொல்லும் கொடைக்குஇங்கு
     சற்றும்இலை என்னல்நன்று
  சம்பத்துடன் பிணியில் மெலிகுவதில் நோய்அற்ற
     தாரித்திரியம் நன்றுகாண்
மடுவினில் கரிஓலம் என்னவந்து அருள்செய்த
     மால்மருகன் ஆனமுதல்வா!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.  

உரை
   

53. பலகூடினும் ஒன்றற்கு ஈடாகாதவை

தாரகைகள் ஒருகோடி வானத்து இருக்கினும்
     சந்திரன்கு ஈடாகுமோ
  தாருவில் கொடிதொனிகள் பலகூடி னாலும்ஒரு
     தம்பட்ட ஓசைஆமோ?
கோரமிகு பன்றியின் குட்டிபல கூடின்ஒரு
     குஞ்சரக் கன்றுஆகுமோ?
  கொட்டிமலர் வாவியில் பலகூடி னாலும்ஒரு
     கோகனகமலர் ஆகுமோ?
பாரமிகு மாமலைகள் பலகூடி னாலும்ஒரு
     பைம்பொன்மக மேருஆமோ?
  பலன்இலாப் பிள்ளைகள் அநேகம் பிறந்தும்விற்
     பனன் ஒருவனுக்கு நிகரோ?
வாரணக் கொடிஒரு கரத்தில்பிடித்து ஒன்றில்
     வடிவேல் அணிந்தமுருகா!
  மயில்ஏறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.  

உரை
   

        54. அருமை அறிதல்

மணமாலை அருமையைப் புனைபவர்களே அறிவர்
     மட்டிக் குரங்குஅறியுமோ?
  மக்களுடை அருமையைப் பெற்றவர்களே அறிவர்
     மலடிதான் அறிவதுஉண்டோ?
கணவருடை அருமையைக் கற்பான மாதுஅறிவள்
     கணிகையானவள் அறிவளோ?
  கருதும் ‘ஒரு சந்தி'யின் பாண்டம் என்பதைவரும்
     களவான நாய்அறியுமோ?
குணமான கிளிஅருமை தனைவளர்த்தவர் அறிவர்
     கொடிய பூனையும் அறியுமோ?
  குலவு பெரியோர் அருமை நல்லோர்களே அறிவர்
     கொடுமூடர் தாம்அறிவரோ?
மணவாளன் நீஎன்று குறவள்ளி பின்தொடர
     வனமூடு தழுவும்அழகா!
  மயில்ஏறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!  

உரை
   

    55. தீச்சார்பால் பயன்படாதவை

மடுவினில் கஞ்சமலர் உண்டுஒருவர் அணுகாமல்
     வன்முதலை அங்குஇருக்கும்
  மலையினில் தேன்உண்டு சென்றுஒருவர் கிட்டாமல்
     மருவிஅதில் வண்டுஇருக்கும்
நெடுமைதிகழ் தாழைமலர் உண்டுஒருவர் அணுகாமல்
     நீங்காத முள்இருக்கும்
  நீடுபல சந்தன விருட்சம்உண்டு அணுகாது
     நீள்அரவு சூழ்ந்துஇருக்கும்
குடிமல்கி வாழ்கின்ற வீட்டினில் செல்லாது
     குரைநாய்கள் அங்குஇருக்கும்
  கொடுக்கும் தியாகிஉண்டு இடையூறு பேசும்
     கொடும்பாவி உண்டுகண்டாய்
வடுவையும் கடுவையும் பொருவும்இரு கண்ணிகுற
     வள்ளிக்கு உகந்தகணவா
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!  

உரை
   

      56. வேசையர் இழிவு

பூவில் வேசிகள்வீடு சந்தைப் பெரும்பேட்டை
     புனைமலர் படுக்கைவீடு
  பொன்வாசல் கட்டில்பொது அம்பலம் உடுத்ததுகில்
     பொருவில் சூதாடுசாலை
மேவலாகியகொங்கை கையாடு திரள்பந்து
     விழிமனம் கவர்தூண்டில்ஆம்
  மிக்கமொழி நீர்மேல் எழுத்துஅதிக மோகம் ஒரு
     மின்னல் இருதுடைசர்ப்பம்ஆம்
ஆவல்ஆகிய அல்குலோதண்டம் வாங்கும்இடம்
     அதிக,படம் ஆம்மனதுகல்
  அமிர்தவாய் இதழ் சித்ரசாலை எச்சிற்குழி
     அவர்க்கு ஆசை வைக்கலாமோ?
மாவடிவு கொண்டே ஒளித்தஒரு சூரனை
     வதைத்தவடி வேலாயுதா!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

     57. கலிகாலக் கொடுமை

தாய்புத்தி சொன்னால் மறுத்திடும் காலம்,உயர்
     தந்தையைச் சீறுகாலம்
  சற்குருவை நிந்தை செய்காலம்,மெய்க் கடவுளைச்
     சற்றும் எண்ணாதகாலம்
பேய்தெய்வம் என்று உபசரித்திடும்காலம்
     புரட்டருக்கு ஏற்றகாலம்
  பெண்டாட்டி வையினும் கேட்கின்ற காலம்,நல்
     பெரியர்சொல் கேளாதகாலம்
தேய்வுடன் பெரியவன் சிறுமைஉறு காலம்,மிகு
     சிறியவன் பெருகுகாலம்
  செருவில்விட்டு ஓடினார் வரிசைபெறு காலம்வசை
     செப்புவோர்க்கு உதவுகாலம்
வாய்மதம் பேசிடும் அநியாய காரர்க்கு
     வாய்த்தகலி காலம்ஐயா!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!  

உரை
   

     58. அவரவர்க்கு உரியவை

கல்வியொடு கனமுறச் சபையின்மேல் வட்டமாக்
     காணவைப் போன்பிதாவாம்!
  கற்று உணர்ந்தேதனது புகழால் பிதாவைப்ர
     காசம்செய்வோன் புத்திரன்!
செல்வமிகு கணவனே தெய்வம்என்று அனுதினம்
     சிந்தைசெய்பவள் மனைவியாம்!
  சிநேகிதன் போலவே அன்புவைத்து உண்மைமொழி
     செப்பும் அவனே சோதரன்!
தொல்வளம் மிகுந்தநூல் கரைதெரிந்து உறுதிமொழி
     சொல்லும் அவனேகுரவன்ஆம்
  சொன்னநெறி தவறாமல் வழிபாடு செய்துவரு
     துய்யனே இனியசீடன்!
வல்விரகம் மிஞ்சுசுர குஞ்சரியுடன்குறவர்
     வஞ்சியை மணந்தகணவா!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!  

உரை
   

    59. சிறுமையில் பெருமை

சேற்றில் பிறந்திடும் கமலமலர் கடவுளது
     திருமுடியின் மேல்இருக்கும்!
  திகழ்சிப்பி உடலில் சனித்தமுத்து அரசரது
     தேகத்தின் மேல்இருக்கும்!
போற்றிஇடு பூச்சியின் வாயின்நூல் பட்டுஎன்று
     பூசைக்கு நேசம்ஆகும்!
  புகல்அரிய வண்டுஎச்சில் ஆனதேன் தேவர்கோன்
     புனிதஅபிடேகம்ஆகும்!
சாற்றிய புலாலொடு பிறந்தகோரோசனை
     சவாதுபுழுகு அனைவர்க்கும்ஆம்!
  சாதிஈனத்தில் பிறக்கினும் கற்றோர்கள்
     சபையின்மேல் வட்டம் அன்றோ?
மாற்றிச் சுரத்தினை விபூதியால் உடல்குளிர
     வைத்த மெய்ஞ்ஞான முதலே!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!  

உரை
   

      60. செய்யத் தகாதவை

தான் ஆசரித்துவரு தெய்வம்இது என்றுபொய்ச்
     சத்தியம் செயின்விடாது
  தன்வீட்டில் ஏற்றிய விளக்குஎன்று முத்தம்
     தனைக் கொடுத்தால்அதுசுடும்!
ஆனாலும் மேலவர்கள் மெத்தவும் தனதுஎன்று
     அடாது செய்யின் கெடுதியாம்
  ஆனைதான் மெத்தப் பழக்கம் ஆனாலும்செய்
     யாதுசெய்தால் கொன்றிடும்
தீனானது இனிதென்று மீதூண் விரும்பினால்
     தேக பீடைகளே தரும்
  செகராசர்சனு என ஏலாத காரியம்
     செய்தால் மனம்பொறார்காண்
வான்நாடு புகழும்ஒரு சோணாடு தழையஇவண்
     வந்து அவதரித்தமுதலே!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!  

உரை