71-80 வரை
 

      71. யாக்கை நிலையாமை

மனு நல் மாந்தாதாமுன் ஆனவர்கள் எல்லோரும்
     மண்மேல் இருந்துவாழ்ந்து
  மடியாதுஇருந்தபேர் இல்லைஅவர் தேடியதை
     வாரிவைத்தவரும் இல்லை;
பனிஅதனை நம்பியே ஏர்பூட்டு கதைஎனப்
     பாழான உடலைநம்பிப்
  பார்மீதில் இன்னும்வெகு நாள்இருப் போம்என்று
     பல்கோடி நினைவைஎண்ணி
அனிதமாய் விருதாவில் மாய்வதே அல்லாமல்
     அன்பாக நின்,பதத்தை
  அர்ச்சித்து முத்திபெறல் வேண்டும்என்று எண்ணார்கள்
     ஆசைவலையில் சுழலுவார்
வனிதையர்கள் காமவி காரமே பகையாகும்
     மற்றும்ஒரு பகையும்உண்டோ?
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

      72. வேட்டகத்து இகழ்ச்சி

வேட்டகம் தன்னிலே மருகன்வந்திடும் அளவில்
     மேன்மேலும் உபசரித்து
  விருந்துகள் சமைத்துநெய் பால்தயிர் பதார்த்தவகை
     வேண்டுவஎலாம் அமைப்பார்;
ஊட்டமிகு வர்க்கவகை செய்திடுவர் தைலம்இட்டு
     உறுதியாய் முழுகுவிப்பார்;
  ஓயாது தின்னவே பாக்குஇலை கொடுத்திடுவர்
     உற்றநாள் நால்ஆகிலோ
நாட்டம்ஒரு படிஇரங்குவது போல் மரியாதை
     நாளுக்குநாள் குறைவுஉறும்
  நகைசெய்வர் மைத்துனர்கள் அலுவல்பார் போஎன்று
     நாணாமல் மாமிசொல்வாள்;
வாட்டமனையாள் ஒரு துரும்பாய் மதிப்பள்; அவன்
     மட்டியிலும் மட்டிஅன்றோ?
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

    73. செல்வம் நிலையாமை

ஓடம்இடும் இடமது மணல்சுடும் சுடும்இடமும்
     ஓடம்மிகவே நடக்கும்;
  உற்றதுஓர் ஆற்றின்நடு மேடுஆகும் மேடுஎலாம்
     உறுபுனல்கொள் மடுஆயிடும்
நாடுகாடு ஆகும்உயர் காடுநாடு ஆகிவிடும்
     நவில்சகடு மேல்கீழதாய்
  நடைஉறும் சந்தைபல கூடும் உடனேகலையும்
     நல்நிலவும் இருளாய்விடும்;
நீடுபகல் போயபின் இரவுஆகும் இரவுபோய்
     நிறைபகல் போதுஆய்விடும்;
  நிதியோர் மிடித்திடுவர் மிடியோர் செழித்திடுவர்;
     நிசம்அல்ல வாழ்வுகண்டாய்
மாடுமனை பாரிசனம் மக்கள்நிதி பூடணமும்
     மருவுகனவு ஆகும் அன்றோ?
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

    74. பிறந்தார் பெறும் பேறு

சடம்ஒன்று எடுத்தால் புவிக்குநல்லவன் என்று
     தன்பேர் விளங்கவேண்டும்;
  சதிருடன் இதுஅல்லாது மெய்ஞ்ஞானி என்றுஅவ
     தரிக்கவே வேண்டும்அல்லால்
திடம்இனிய ரணசூர வீரன்இவன் என்னவே
     திசைமெச்ச வேண்டும்அல்லால்
  தேகிஎன வருபவர்க்கு இல்லை என்னாமலே
     செய்யவே வேண்டும்அல்லால்
அடைவுடன் பலகல்வி ஆராய்ந்து வித்துவான்
     ஆகவே வேண்டும்,அல்லால்
  அறிவினால் துரைமக்கள் ஆகவர வேண்டும்,இவர்
     அதிக பூபாலர்ஐயா
வடகுவடு கிடுகிடுஎன எழுகடலும் அலைஎறிய
     மணிஉரகன் முடிகள்நெரிய
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

      75. வேசை நிந்தை

தேடித்தம் வீட்டில் பணக்காரர் வந்திடின்
     தேகசீவன் போலவே
  சிநேகித்த உம்மை, ஒரு பொழுதுகாணாவிடின்
     செல்உறாது அன்னம்என்றே
கூடிச் சுகிப்பர்என்ஆசை உன் மேல்என்று
     கூசாமல் ஆணைஇடுவார்
  கொங்கையை வெடிக்கப் பிடிக்கக் கொடுத்துஇதழ்
     கொடுப்பர் சும்பனம்உகப்பர்
வேடிக்கை பேசியே சைம்முதல் பறித்தபின்
     வேறுபட நிந்தைசெய்து
  விடவிடப் பேசுவர் தாய்கலகம் மூட்டியே
     விட்டுத் துரத்திவிடுவார்
வாடிக்கையாய் இந்த வண்டப் பரத்தையர்
     மயக்கத்தை நம்பலாமோ?
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

      76. இதற்கு இது உறுதி எனல்

கைக்குஉறுதி வேல்வில்; மனைக்குஉறுதி மனையாள்;
     கவிக்குஉறுதி பொருள்அடக்கம்
  கன்னியர் தமக்குறுதி கற்புடைமை; சொற்குஉறுதி
     கண்டிடில் சத்யவசனம்;
மெய்க்குஉறுதி முன்பின்; சபைக்குஉறுதி வித்வசனம்;
     வேசையர்க்கு உறுதிதேடல்
  விரகருக்கு உறுதிபெண்; மூப்பினுக்கு உறுதிஊண்
     வீரருக்கு உறுதிதீரம்;
செய்க்குறுதி நீர், அரும் போர்க்குஉறுதி செங்கோல்;
     செழும்படைக்கு உறுதிவேழம்;
  செல்வம் தனக்குஉறுதி பிள்ளைகள்; நகர்க்குஉறுதி
     சேர்ந்திடும் சர்ச்சனர்களாம்;
மைக்குஉறுதி ஆகிய விழிக்குறமடந்தை சுர
     மங்கை மருவும்தலைவனே!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல்! வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

     77. வறுமையில் சிறுமை

வறுமைதான் வந்திடின் தாய்பழுது சொல்லுவாள்;
     மனையாட்டி சற்றும் எண்ணாள்;
  வாக்கில் பிறக்கின்ற சொல்எலாம் பொல்லாத
     வசனமாய் வந்துவிளையும்;
சிறுமையொடு தொலையா விசாரமே அல்லாது
     சிந்தையில் தைரியம்இல்லை;
  செய்யசபை தன்னிலே சென்றுவர வெட்கம்ஆம்;
     செல்வரைக் காணில்நாணும்;
உறுதிபெறு வீரமும் குன்றிடும்; விருந்துவரின்
     உயிருடன் செத்தபிணமாம்;
  உலகம் பழித்திடும் பெருமையோர் முன்புசென்று
     ஒருவர்ஒரு செய்திசொன்னால்
மறுவசனமும் சொலார்; துன்பினில் துன்பம்இது
     வந்துஅணுகிடாது அருளுவாய்
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

    78. தீச் சார்பால் நன்மை இழப்பு

ஆனை தண்ணீரில்நிழல் பார்த்திடத் தவளைசென்று
     அங்கே கலக்கிஉலவும்;
  ஆயிரம்பேர் கூடி வீடு கட்டிடில்ஏதம்
     அறைகுறளும் உடனேவரும்;
ஏனைநல் பெரியோர்கள் போசனம் செயும்அளவில்
     ஈக்கிடந்து இசைகேடதாம்;
  இன்பமிகு பசுவிலே கன்றுசென்று ஊட்டுதற்கு
     இனியகோன் அதுதடுக்கும்;
சேனைமன் னவர்என்ன கருமம் நியமிக்கினும்
     சிறியோர்க ளால்குறைபடும்;
  சிங்கத்தையும் பெரிய இடபத்தையும் பகைமை
     செய்ததுஒரு நரிஅல்லவோ?
மானையும் திகழ்தெய்வயானையும் தழுவுமணி
     மார்பனே! அருளாளனே!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

79. இடுக்கண் உற்றும் பயன்படுபவை

ஆறு தண்ணீர்வற்றி விட்டாலும் ஊற்றுநீர்
     அமுதபானம் கொடுக்கும்;
  ஆதவனை ஒருபாதி கட்செவி மறைத்தாலும்
     அப்போதும் உதவிசெய்வன்;
கூறுமதி தேய்பிறையது ஆகவே குறையினும்
     குவலயத்து இருள்சிதைக்கும்;
  கொல்லைதான் சாவிபோய் விட்டாலும் அங்குவரு
     குருவிக்கு மேய்ச்சல்உண்டு
வீறுடன் உதாரிதான் மிடியானபோதினிலும்
     மிக நாடிவருபவர்க்கு
  வேறுவகை இல்லைஎன்று உரையாது இயன்றன
     வியந்துஉளம் மகிழ்ந்துஉதவுவான்;
மாறுபடு சூரசங்கார, கம்பீரனே!
     வடிவேல் அணிந்தமுருகா!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

80. இது இல்லாதவர்க்கு இது இல்லை!

சார்பு இலாதவருக்கு நிலைஏது; முதல்இலா
     தவருக்கு இலாபம்ஏது;
  தயைஇலாதவர் தமக்கு உறவேது; பணமிலா
     தார்க்குஏது வேசை உறவு;
ஊர் இலாதவர் தமக்கு அரசுஏது; பசிவேளை
     உண்டிடார்க்கு குறுதிநிலைஏது
  உண்மை இல்லாதவர்க்கு அறம்ஏது முயல்விலார்க்கு
     உறுவதுஒரு செல்வம்ஏது
சோர்விலாதவருக்கு மற்றும்ஒரு பயம்ஏது?
     சுகம்இலார்க்கு ஆசைஏது?
  துர்க்குணம் இலாதவர்க்கு எதிராளி ஏது; இடர்செய்
     துட்டருக்கு இரக்கம்ஏது
மார்புஉருவ வாலிமேல் அத்திரம் விடுத்தநெடு
     மால்மருகனான முருகா!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை