91-100 வரை
 

  91. தன் இனத்தையே அழிப்பவை

குலமான சம்மட்டி குறடுகைக்கு உதவியாய்க்
     கூர் இரும்புகளை வெல்லும்;
  கோடாலி தன்னுளே மரம்அது நுழைந்துதன்
     கோத்திரம் எலாம் அழிக்கும்;
நலமான பார்வைசேர் குருவியானது வந்து
     நண்ணு பறவைகளை ஆர்க்கும்;
  நட்புடன் வளர்த்த கலைமான்ஒன்று சென்றுதன்
     நவில்சாதி தனைஇழுக்கும்
உலவுநல் குடிதனில் கோளர்கள் இருந்துகொண்டு
     உற்றாரை ஈடழிப்பர்;
  உளவன் இல்லாமல்ஊர் அழியாதுஎனச் சொலும்
     உலகமொழி நிசம் அல்லவோ
வலமாக வந்துஅரன் இடத்தினில் கனிகொண்ட?
     மதயானை தன்சோதரா!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

      92. வீணுக்கு உழைத்தல்

குயில்முட்டை தனதுஎன்று காக்கை அடைகாக்கும்
     குணம்போலும் ஈக்கள் எல்லாம்
  கூடியே தாம்உண்ண வேண்டும்எனறே தினம்
     கூடுஉய்த்த நறவுபோலும்;
பயில்சோரருக்குப் பிறந்திடத் தாம்பெற்ற
     பாலன்என்று உள்கருதியே
  பாராட்டி முத்தம்இட்டு அன்பாய் வளர்த்திடும்
     பண்புஇலாப் புருடர்போலும்;
துயில்இன்றி நிதிகளைத் தேடியே ஒருவர்பால்
     தொட்டுத் தெரித்திடாமல்
  தொகைபண்ணி வைத்திடுவர் கைக்கொண்டு போகவரு
     சொந்தமானவர் வேறுகாண்;
வயிரமொடு சூரனைச் சங்காரமே செய்து
     வானவர்க்கு உதவுதலைவா!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

  93. இது சேரின் இது பயன்படாது

அழலுக்குளே விட்ட நெய்யும், பெருக்கான
     ஆற்றில் கரைத்தபுளியும்,
  அரிதான கமரில் கவிழ்த்திட்ட பாலும்வரும்
     அலகைகட்கு இடுபூசையும்,
சுழல்பெருங் காற்றினில் வெடித்தபஞ்சும், மணல்
     சொரிநறும் பனிநீரும்,நீள்
  சொல்அரிய காட்டுக்கு எரித்த நிலவும்கடல்
     சுழிக்குளே விடுகப்பலும்,
விழலுக்கு இறைத்திட்ட தண்ணீரும், முகம்மாய
     வேசைக்கு அளித்தபொருளும்,
  வீணருக்கே செய்த நன்றியும் பலன்இல்லை
     விருதா இது என்பர்கண்டாய்
மழலைப் பசுங்கிள்ளை முன்கை, மலைமங்கைதரு
     வண்ணக் குழந்தைமுருகா!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

      94. கைவிடத் தகாதவர்

அன்னை சுற்றங்களையும், அற்றைநாள் முதலாக
     அடுத்துவரு பழையோரையும்,
  அடுபகைவரில்தப்பி வந்தஒரு வேந்தனையும்
     அன்பான பெரியோரையும்
தன்னை நம்பினவரையும் ஏழையானவரையும்
     சார்ந்த மறையோர் தம்மையும்
  தருணம்இது என்றுநல் ஆபத்து வேளையில்
     சரணம் புகுந்தோரையும்
நன்நயமது ஆகமுன் உதவிசெய் தோரையும்
     நாளும் தனக்குஉறுதியாய்
  நத்து சேவகனையும் காப்பது அல்லாதுகை
     நழுவவிடல் ஆகாதுகாண்
மன்அயிலும் இனிய செஞ்சேவலும் செங்கைமலர்
     வைத்த சரவணபூபனே!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

        95. தகாத செயல்கள்

அண்டிவரும் உற்றார் பசித்துஅங்கு இருக்கவே
     அன்னியர்க்கு உதவுவோரும்;
  ஆசுதபு பெரியோர்செய் நேசத்தை விட்டுப்பின்
     அற்பரை அடுத்தபேரும்;
கொண்டஒரு மனையாள் இருக்கப் பரத்தையைக்
     கொண்டாடி மருவுவோரும்;
  கூறு சற்பாத்திரம் இருக்கமிகு தானமது
     குணம்இலார்க்கு ஈந்தபேரும்
கண்டுவரு புதியோரை நம்பியே பழையோரைக்
     கைவிட்டு இருந்தபேரும்
  கரிவாலை விட்டு நரிவால்பற்றி நதிநீர்
     கடக்கின்ற மரியாதைகாண்
வண்டுஅடர் கடப்பமலர் மாலிகாபரணம்அணி
     மார்பனே! அருளாளனே!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

    96. நல்லோர் முறைமை

கூடியே சோதரர்கள் வாழ்தலாலும் தகு
     குழந்தைபல பெறுதலாலும்
  குணமாகவே பிச்சை இட்டு உண்கையாலும்
     கொளும்பிதிர்க்கு இடுதலாலும்
தேடியே தெய்வங்களுக்கு ஈதலாலும்
     தியாகம் கொடுத்தலாலும்
  சிறியோர்கள் செய்திடும் பிழையைப் பொறுத்துச்
     சினத்தைத் தவிர்த்தலாலும்
நாடியே தாழ்வாய் வணங்கிடுதலாலும் மிக
     நல்வார்த்தை சொல்லலாலும்
  நன்மையே தரும்அலால் தாழ்ச்சிகள் வராஇவை
     நல்லோர்கள் செயும்முறைமைகாண்
வாடிமனம் நொந்துதமிழ் சொன்னநக்கீரன் முன்
     வந்துஉதவி செய்தமுருகா!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

     97. அடைக்கலம் காத்தல்

அஞ்சல்என நாயின்உடல் தருமன் சுமந்துமுன்
     ஆற்றைக் கடத்துவித்தான்;
  அடைக்கலம் எனும்கயற்காக, நெடு மாலுடன்
     அருச்சுனன் சமர்புரிந்தான்;
தஞ்சம்என வந்திடு புறாவுக்கு முன்சிபி
     சரீரம் தனைக்கொடுத்தான்;
  தடமலைச் சிறகு அரிந்தவனைமுன் காக்கத்
     ததீசிமுதுகு என்புஅளித்தான்;
இன்சொலுடனே பூத தயவுடையர் ஆயினோர்
     எவருக்கும் ஆபத்திலே
  இனியதம் சீவனை விடுத்தாகி லும்காத்து
     இரங்கி இரட்சிப்பர் அன்றோ?
வஞ்சகிரவுஞ்சமொடு தாருகன் சிங்கமுகன்
     வளர்சூரன் உடல்கீண்டவா!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

   98. தக்கவையும் தகாதவையும்

பாலினொடு தேன்வந்து சேரில்ருசிஅதிகமாம்
     பருகுநீர் சேரின் என்ஆம்
  பவளத்தின் இடைமுத்தை வைத்திடில் சோபிதம்
     படிகமணி கோக்கின்என்ஆம்?
மேல்இனிய மன்னர்பால் யானை சேர்வதுகனதை
     மேடம்அது சேரின்என்ஆம்?
  மிக்கான தங்கத்தில் நவமணி உறின்பெருமை
     வெண்கல் அழுத்தின்என்ஆம்?
வாலிப மினார்களுடன் இளையோர்கள் சேரின்நலம்
     வளைகிழவர் சேரின்என்ஆம்?
  மருவு நல்லோரிடம் பெரியோர் வரின்பிரியம்
     வருகயவர் சேரின்என்ஆம்?
மாலிகை தரித்தமணி மார்பனே தெய்வானை
     வள்ளிக்கு வாய்த்தகணவா!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

        99. பெரியோர் இயல்பு

அன்னதானம் செய்தல் பெரியோர்சொல் வழிநிற்றல்
     ஆபத்தில் வந்தபேர்க்கு
  அபயம் கொடுத்திடுதல் நல்இனம் சேர்ந்திடுதல்
     ஆசிரியன் வழிநின்றவன்
சொன்னமொழி தவறாது செய்திடுதல் தாய்தந்தை
     துணைஅடி அருச்சனைசெயல்
  சோம்பல் இல்லாமல் உயிர்போகினும் வாய்மைமொழி
     தொல்புவியில் நாட்டிஇடுதல்
மன்னரைச் சேர்ந்துஒழுகல் கற்புடைய மனைவியொடு
     வைகினும் தாமரைஇலை
  மருவுநீர் எனஉறுதல் இவைஎலாம் மேலவர்தம்
     மாண்புஎன்று உரைப்பர் அன்றோ?
வன்னமயில் மேல்இவர்ந்து இவ்உலகை ஒருநொடியில்
     வலமாக வந்தமுருகா!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

      100. நூலின் பயன்

குறையாத காயத்ரி ஆதி செபமகிமையும்,
     கூறு சுருதிப்பெருமையும்,
  கோதிலா ஆகம புராணத்தின் வளமையும்,
     குலவுயாக ஆதிபலவும்,
முறையாய் நடத்தலால் சகல தீவினைகளையும்
     முளரிபோலே தகிப்பார்
  முதன்மைபெறு சிலைசெம்பு பிரிதிவிகளில்தெய்வ
     மூர்த்தம் உண்டாக்குவிப்பார்
நிறையாக நீதிநெறி வழுவார்கள் ஆகையால்,
     நீள்மழை பொழிந்திடுவதும்,
  நிலமது செழிப்பதும், அரசர் செங்கோல்புரியும்
     நிலையும், மாதவர் செய்தவமும்,
மறையோர்களாலே விளங்கும் இவ்உலகத்தின்
     மானிடத் தெய்வம்இவர் காண்
  மயில்ஏறி விளையாடு குகனே!புல்வயல் நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   
 
காப்பு

பூமேவு புல்லைப் பொருந்து குமரேசர்மேல்
தேமேவிய சதகம் செப்பவே - கோமேவிக்
காக்கும் சரவணத்தான் கம்ப கும்பத்து ஐந்துகரக்
காக்கும் சரவணத்தான் காப்பு.
உரை
   
      அவையடக்கம்

     இரட்டை ஆசிரிய விருத்தம்

மாரிக்கு நிகர்என்று பனிசொரிதல் போலவும்,
     மனைக்குநிகர் என்றுசிறுபெண்
  மணல்வீடு கட்டுவது போலவும், சந்த்ரன்முன்
     மருவு மின்மினி போலவும்,

பாருக்குள் நல்லோர் முனே பித்தர் பலமொழி
     பகர்ந்திடும் செயல்போலவும்,
  பச்சைமயில் ஆடுதற்கு இணைஎன்று வான்கோழி
     பாரில் ஆடுதல் போலவும்,

பூரிக்கும் இனிய காவேரிக்கு நிகர்என்று
     போது வாய்க்கால்போலவும்,
  புகல்சிப்பி முத்துக்கு நிகராப் பளிங்கைப்
     பொருந்த வைத்தது போலவும்,

வாரிக்கு முன்வாவி பெருகல்போலவு இன்சொல்
     வாணர்முன் உகந்துபுல்லை
  வாலகுமரேசர் மேல்சதகம் புகன்றனன்
     மனம்பொறுத்து அருள்புரியவே.

உரை