115

கிழப்பிராமணனாக அக்கோயிற் கடவுள் எதிர்தோன்றி, கொஞ்சம் மிளகு
தருதல் வேண்டுமென்று கேட்டனர். இப்பொதிகள் பயறு என்றனர்.
"அப்படியே ஆகுக" எனப்போயினர். வணிகன் மூட்டைகளை எருதுகளின்
மீது ஏற்றிக்கொண்டு திருவாரூர் போய்ச் சேர்ந்தான். மிளகு விலைபேசினான்.
தொகையைப் பெற்றுக் கொண்டு மூட்டையை அவிழ்த்துக் கொட்டினான்.
எல்லாம் பயறாகவே இருந்தது. வர்த்தகர்கள் எல்லோரும் இவன் புரட்டன்
எனச் சினந்தார்கள். அப்பொழுது முன்வந்த கிழப்பிராமணன் செட்டியாரே,
தென்கரை நாட்டில் நான் கொஞ்சம் மிளகு கேட்ட பொழுது இது பயற்றுப்
பொதியென்றீரே என்றனர். வணிகன் திகைத்து இப்பொழுது தோன்றியவரும்,
முன் வந்தவரும் சிவபெருமானே எனத் துணிவுகொண்டு வணங்கி,
எம்மடிகளே, மிளகைப் பயறுசெய்த நீரே, இப்பயறை மிளகு செய்தருளும்
என்று வேண்டினன். தென்கரை நாட்டில் இடைச் சிறுவனிட்ட பந்தல் எமது
கோயில். அதனைக் கற்பணி செய்யென மறைந்தருளினார். குவித்துள்ள
பயறுகளெல்லாம் மிளகு ஆயின.

அவ்வி டத்திலுறை யும்பதத்துமுன தருகுவந்து மிளகாசையாற்
செவ்வி பெற்றமெய் வருந்திநின்றது பொறாது போனகுறி தேறுவாய்
பவ்வ மற்றநெறி வணிகனே நமது பணிசெ யென்றுகுவி பயறெலாம்
வெவ்வி யற்கைபெறு மிளகு செய்தருளி யேகினார் பரமவெளியிலே

(அப்பிரமேயர் தலபுராணம்)

இம்முடி மசக்காளி மன்றாடி

85.



நல்லார் புகழ்மசக் காளி கவசையி னாவினிசை
யெல்லாஞ் சொலிநிலை நில்லாமற் பல்லக் கிரவை பற்றிச்
சொல்லா லுயர்ந்த படிக்காசன் கட்டிச் சுமக்கக்கவி
வல்லா ரடித்துத் துறத்திய துங்கொங்கு மண்டலமே.

     (க-ரை) மசக்காளி மன்றாடியின் கவசை (ஆறை நாட்டுள்ள சர்க்கார்
சாமக்குளம் = கோயிற்பாளையம்) நகரில் நடந்த பா இயற்று வாதப்போரில்
நிற்கவில்லையென்று பல்லக்குஞ் சன்மானப் பொருள்களையும்
பற்றிக்கொண்டு, மற்றை உள்ளவற்றை மூட்டை கட்டிப் படிக்காசுப் புலவர்
சுமந்து நடந்து போகும்படி ஊரைவிட்டகற்றிய கவிசொல்லுந் திறமுடைய
வருங்கொங்கு மண்டலம் என்பதாம்.