20

மருவினான்றனை வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை
                     மறந்தென் னினைக்கேனே

(சுந்தரர் வாள்கொளி புத்தூர் தேவாரம்)

                         பழநி

22.



தீத்திகழ் மேனி சிவன்கையில லோர்கனி தேவர்மெச்சி
ஏத்திய நாரதர் நல்கக்கண் டேயிப மாமுகத்து
மூத்தவன் கொள்ள விளையோனை யீசன் முகந்திருத்தி
வாய்த்த பழநியென் றோதின துங்கொங்கு மண்டலமே

     (க-ரை) நாரதமுனிவர், சிவபெருமான் றிருவடியில் ஒரு மாம்பழத்தை
வைத்து வணங்கினர். அதனை விநாயகக் கடவுள் பெற்றுக் கொண்டனர்.
சினங்கொண்ட குமாரக் கடவுளைத் திருத்திப் பழம் நீ என்று சொன்னதுங்
கொங்குமண்டலம் என்பதாம்.

     வரலாறு:- பிரமதேவன் முன் நாரத முனிவர் வீணைவாசித்தனர்.
மகிழ்ந்து நான்முகன் ஒரு மாங்கனி உதவினன். பெற்ற கனியைக்
கைலாயத்துச் சென்ற முனிவர் சிவபிரான் திருமுன் வைத்துப் பணிந்தனர்.
இரண்டு திருக்குமாரர்களையும் நோக்கி இவ்வுலகை வலமாக வந்து
முன்னே கேட்பவர்கள் இக்கனியை அடையலாம் என மலைமகள் பாகன்
கட்டளையிட்டனர். இளைய பிள்ளையாகிய கந்தவேள் சுற்றிவருவதன்
முன், மூத்தபிள்ளையார் கடவுளை வலமுற்று எல்லா அண்டமும் சுற்றிவந்து
விட்டேனென்று கையேந்தினர். கருத்தறிந்த கடவுள் அக்கனியைக்
கொடுத்தனர். பின்வந்த குமாரவேள் சோர்வுற்றுக் கயிலையை நீக்கித்
திருஆவினன்குடி சேர்ந்தனர். உமையம்மையுடன் கங்காதரக் கடவுள்
அங்குச் சென்று முருகனை எடுத்தணைத்து "பழம்நீ" யே* என இனிய
மொழியால் இளைய பிள்ளை பிணக்கினைத் தீர்த்தனர். இதனால்
அத்திருப்பதிக்குப் பழனி எனப் பெயராயிற்று. பொதினி எனவும்
முன்னாள் வழங்கினர் என்பர். (இது வையாபுரி நாடு)


* பழம் நீ என்னுஞ் சொற்றொடர் "அல்வழியெல்லா மெல்லெழுத்
  தாகும்"   என்னுந் தொல்காப்பியப் புள்ளி மயங்கியற் சூத்திர விதியால்
  மகரங்கெட்டு   பழநீ எனப்புணர்ந்து. 'நீயெனொரு பெயர் நெடு முதல்
  குறுகும்' என்ற   உருபியற் சூத்திரப்படி பழநியென முடிந்தது.