24

25.



தாணு முலகிற் கடன்முர சார்ப்பத் தரந்தரமாய்ப்
பூணு முலைமட வார்சேனை கொண்டு பொருதுமலர்ப்
பாணன் முதலெவ ரானாலுங் கொல்லியம் பாவை முல்லை
வாணகை யாலுள் ளுருக்குவ துங்கொங்கு மண்டலமே.

     (க-ரை) மன்மதனும் மயங்கத்தக்க இளஞ்சிரிப்புச் செய்யும் கொல்லிப்
பாவை விளங்கும் கொங்கு மண்டலம் என்பதாம்.

     வரலாறு :- உணவுப் பொருள்களான பலவகைப் பழம் தேன்
முதலியன மிகுந்துள்ளது கொல்லி மலையாதலின், தவத்தின் பொருட்டுத்
தனித்து வசிக்க விரும்பிய தேவர்களும் முனிவர்களும் அங்கு வசித்தார்கள்.
அசுரரும் இராக்கதரும் அங்கு வருவதற்குத் தலைப்பட்டார்கள். இவரால்
முனிவர் தவத்துக்கு இடையூறு நேர்ந்தது. காற்று மழை இடி முதலியவற்றிலும்
கேடு கொள்ளாத வாறு ஒரு பாவையை* விசுவகன்மாவைக் கொண்டு
செய்வித்து அம்மலையின் மேற்குப் பாகத்தில் நாட்டினார்கள். பலவகைச்
சக்தியை அதில் ஊட்டியிருப்பதால் அசுரர் முதலாயினோரின் காற்று வாடை
படினும் இளஞ்சிரிப்புக் கொள்ளும். கண்டவரது உள்ளத்தையுங்
கண்பார்வையுங் கவர்ந்து பெருங் காம வேட்கையை உண்டாக்கி முடிவில்
உயிர்போக்கத் தக்க மோகினி வடிவமுடையது. இஃது இயங்குவதையும்,
நகைப்பதையுங் கண்டு மடந்தையாமென மயங்கிக் காமநோய் கொண்டு
மடிவரென்பதாம்.

                       (மேற்)

........... திருபுரத்தைச்
செற்றவனுங் கொல்லிச் செழும்பாவையு நகைக்கக்
கற்றதெலா மிந்தநகை கண்டாயோ

                          (சித்திரமடல்)

செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லித்
தெய்வங் காக்குந் தீதுதீர் நெடுங்கோட்
டவ்வெள் ளருவிக் குடவரை யகத்துக்
கால்பொரு திடிப்பினுங் கதழுறை கடுகினு
முருமுடன் றெரியினு மூறுபல தோன்றினும்
பெருநலங் கிளரினுந் திருநல வுருவின்
மாயா வியற்கைப் பாவை



 * கொல்லி மலையில் எழுந்தருளிய அறப்பளீசுரர் ஆலயத்துக்கு
   மேற்றிசையில் இப்பாவை இருப்பதாகக் கொல்லி மலை அகராதி
   என்னும்    சுவடியில் எழுதப்பட்டுள்ளது. இது இக் காலத்துக்
   காணக்கிடைக்கவில்லை.