51

சேரர் கொங்குவை காவூர்நன் னாடத்தில்
ஆவினன் குடி -
(திருப்புகழ்)

     இந்தப் பழனிக்கு அருகில் ஆய்க்குடி என்னும் ஊர் இருக்கிறது. இது
பல ஊர்களைத் தன்னுளடக்கியுள்ள ஒரு ஜமீனின் தலை நகரம். ஜமீன்தார்
வேடஜாதி, ஆய் எயினன் எனப் பரணர் முதலியோர் அகநானூற்றில் கூறும்
ஆய்க்கும், இவ் ஆய்க்குடியை ஆள்வோருக்கும், ஏதேனும் பொருத்தம்
இருக்குமோ என ஐயம் நிகழ்கிறது.

                         அசதி

45.



தெய்விக மான தமிழ்ப்புல வோர்கள் தினமுளங்கொள்
பொய்தீ ருரையெம் பிராட்டியா ரௌவை புனைந்துபுகழ்
செய்கோவை யேற்ற திறலோ னசதி செழித்துவளர்
மைதாழ் பொழிறிக ழைவேலி யுங்கொங்கு மண்டலமே.

     (க-ரை) தெய்வத் தமிழ்ப்புலவர்கள் சிந்திக்கும் ஒளவையாரால்
கோவையென்னும் பிரபந்தத்தைப் பாடக்கேட்ட அசதி யென்னும் உபகாரி
வசித்த ஐவேலியுங் கொங்கு மண்டலம் என்பதாம்.

     வரலாறு : ஒளவையார் கொங்கு நாட்டில் (குன்றத்தூர்க் கூற்றம்)
மலைமேல் ஏழு சுற்றுக்கோட்டையுள்ள சங்ககிரி துர்க்கத்துக்கு அடுத்துக்
கிழக்கில் இரண்டு நாழிகை வழியில் ஐவேலி என்னும் ஊரில் அசதியென்கிற
பிரபு இல்லத்தில் தங்கினார். ஒளவையாரென அறிந்த அவ்வுபகாரி
பொன்னிலை இட்டு அன்னம் படைத்து உபசாரம் புரிந்தனன். மனமகிழ்ந்த
ஒளவைப்பிராட்டியார் அந்த இடையர் தலைவன் மீது கோவைப் பிரபந்தம்
பாடினார். அதனை அசதிக்கோவை யென்பார்.

                         (மேற்)

ஐவே லசதி யிரவினி லௌவைக் கமுத ளித்து
மெய்வேதம் போனிற்குங் கோவைகொண்டோன் புவி மீதிற்றவஞ்
செய்வோன் றனிலும் பசுக்காவன் மிக்கெனச் செய்யுமன்பன்
மைவேலை வண்ணன் சதியுடன் வாழ்நந்த மண்டலமே.
                                   (நந்த மண்டல சதகம்)