1-10 வரை
 
பூமாது பொன்னம் புயத்தினில் மேவிப் பொலிந்திருக்க
நாமாது சங்கப் பலகையி லேறி நலம்பெருக்கக்
கோமான் மலயத் துவசன் பயந்த குமரியெனு
மாமாது நீதி யரசாளும் பாண்டியன் மண்டலமே.            



(1)
   

விகடம் புரிதிக்குப் பாலரை வென்று விசயமண்ட
முகடொன்று மும்முலைப் பெண்மா மணஞ்செய்து மூரியதேர்ப்
பகடும் புரவியு மூர்ந்த சவுந்தர பாண்டியனாய்
மகுடம் புனைசொக்கர் செங்கோல்செய் பாண்டியன்
மண்டலமே.




(2)
   

பழுதறு மேருவிற் செண்டுங் கயலும் பதித்துவைய
முழுதுந்தன் கொற்றக் குடையால் நிழற்றி முறைபுரிந்தே
யுழுதுசெந் தேனுண்டு வண்டாடும் வேம்பணி யுக்கிரப்பேர்
வழுதியென் றாறு முகன்காக்கும் பாண்டியன் மண்டலமே.  




(3)
   

தென்றிசை மேலும் வடதிசை தாழவுந் தேவிமண
மன்றுசெய் கின்ற வரனா ரகத்திய வப்பொதிகைக்
குன்றினி லேகு கெனவுந் தமிழ்பொதி கூடல்வெள்ளி
மன்றினில் வந்து சமானஞ்செய் பாண்டியன் மண்டலமே.      




(4)
   
தண்டமிழ் கொண்டு சிவத்தலம் விண்டு தலம்விளக்கி
யெண்டரு முற்சங்க மேறி யிலக்கண லக்யஞ்செய்து
குண்டிகை நீர்கொண்டு காவேரி தந்து கொழுந்தமிழின்
மண்டலங் கண்ட குறுமுனி பாண்டியன் மண்டலமே.



(5)
   

ஒருகவிக் கோரொரு தேங்காய்பொன் னாற்செய் துருட்டிக்கல்வி
பெருகச்செய் நாவலர் வாழக் கொடுத்துப்ர தாபம்பெற்றான்
திருமலி தஞ்சையிற் கோவைத் தமிழ்கொண்டு செல்வமிக
வருதரு வாகிய வாணனும் பாண்டியன் மண்டலமே.




(6)
   

ஏரொக்குஞ் செஞ்சொ லகப்பொரு ணூலுக் கிலக்கியமாய்
நேரொக்க வாழும் இரட்டையர் பாடி நிறுத்தவவர்
பூரிக்கத் தஞ்சைநற் கோவைகொண் டேமெச்சிப் பொக்கசத்து
வாரிக் கொளச்சொன்ன வாணனும் பாண்டியன் மண்டலமே.   




(7)
   

தெரிபுல வோர்தம் மதுரைமட் டாய்ச்செல்லச் சென்றபொதி
யெருதினி லேற்றிப் பொதித்தலஞ் சென்றதற் கேயஞ்சலாய்ப்
பெருமுர சார்த்திடக் கப்பனற் கோவைப்ர பந்தங்கொண்ட
வருகரு மாணிக்கன் வாழ்வான பாண்டியன் மண்டலமே.     




(8)
   

நற்குடி நாற்பத்தெண் ணாயிர வோரைமுன்
                               னாட்டொண்டைமான்
சக்கர வர்த்தி தரவேண்டு மென்றுவந் தாதரிப்பத்
திக்கனைத் தும்புகழ் தென்னவன் தேடித் தெரிந்தனுப்பும்
வர்க்கமாகிய வேளாளர் பாண்டியன் மண்டலமே.           





(9)
   

கொல்ல னொடுதச்சன் தட்டான்வண் ணான்குய வன்கணக்கன்
புல்லிய பூக்கட்டி நாவிதன் வீரன் புனமடக்கி
நல்ல வுவச்சன் பறைகொட்டி தொண்டைநன் னாட்டினிலே
வல்ல குடிவைத்த மாறனும் பாண்டியன் மண்டலமே.




(10)