21-30 வரை
 

படிமீ தறுபத்து மூவரிற் பேரும் படைத்ததற்கா
முடிமீது கீரையும் மாவடு வுங்கொண்டு முக்கணற்குக்
கடிதேகும் போதிட ருற்றுக் கழுத்ததைக் கையிலுள்ள
வடிவாள்கொண் டேயரி வேளாளர் பாண்டியன் மண்டலமே.




(21)
   

செந்நெல் முதிர்ந்தது பொன்னாய் விளைந்திடச் சிந்தைமகிழ்ந்
தந்நெல் செலவிடல் போலப் புலவர்க்கு மாதுலர்க்குந்
துன்னிய கூலிக்கும் வேண்டிய பேர்க்குநற் சுந்தரர்க்கும்
மன்னர்க்கு நல்கிய வேளாளர் பாண்டியன் மண்டலமே.




(22)
   

உழுதுண்டு வாழ்பவ ரேவாழ் பவர்மற் றுலகிலுள்ளோர்
தொழுதுண்டு பின்செல் பவரென்று வள்ளுவர் சொன்னவரப்
பழுதின்றி யேகம்ப னாரே ரெழுபது பாடியவர்
வழுவொன்றி லாதவவ் வேளாளர் பாண்டியன் மண்டலமே.




(23)
   

களமார் கறைக்கண்டச் சொக்கேசர் நிற்கக் கரணபரந்
தளமான பாத முருக்கொடு நாப்பண் தளைத்திருப்ப
வுளமா தவரொடு சங்கப் பலகையி லொக்கவைகும்
வளமான பன்னிரு வேளாளர் பாண்டியன் மண்டலமே.




(24)
   

உத்தம னாமவ் வழுதியைச் சோழ னுயிர்கவர்ந்தே
இத்தலங் காக்கு மவனிறந் தேவிட விந்துகுலப்
புத்திர னாண்டிட வேளாளர் பொன்முடி நெல்முடியை
வைத்தர சாட்சி கொடுத்ததும் பாண்டியன் மண்டலமே.




(25)
   

நளனைப் புகழ்கின்ற வெண்பாவைப் பாடிநன் னாட்கவிதை
களகத்தில் மிக்க புகழேந்தி யாங்கவி ராசன் றன்னைத்
தளவப் பெருநகை மாதொடு தென்னவன் றான்மணஞ்செய்
வளவற்குச் சீதன மீந்ததும் பாண்டியன் மண்டலமே.




(26)
   

தேனலர் கற்பக நாடனுஞ் சேரனுஞ் சோழனுஞ்சொல்
தானுறு மேகம் புவியி லெனும்படி தாமவணி
மீனவன் மீனக் கொடிக்கே துணைகொண்டு மேற்குடியில்
வானள வோச்சிய வேளாளர் பாண்டியன் மண்டலமே.




(27)
   

முளைவாரி முன்னமெம் மாற்கமு திட்டும் முழங்கைவரைத்
துளைவாயி லிட்டும் சுடுசோறு சூலி முதுகிலிட்டும்
விளைவாஞ் சிலந்தியை யாடையைக் கீறி வெளியிலிட்டும்
வளமான கீர்த்திகொள் வேளாளர் பாண்டியன் மண்டலமே.




(28)
   

பார்த்தொரு பாணன் பிணமுஞ் சுமந்து பறையனுயிர்
காத்திதற் குப்பின்பு நீலி பழியைத் தழுவிக்கங்கா
கோத்திரத் தாரென்றே பேர்கொண்டு கம்பற்குக் கொத்துடனே
மாத்தொழில் தான்செய்யும் வேளாளர் பாண்டியன் மண்டலமே.




(29)
   

பேர்கொண் டரசுசெய் மீனாட்சி யம்மன்றன் பிள்ளைத்தமிழ்
கூர்கொண்ட சூலங்கொள் சொக்கேசர் மும்மணிக்
கோவைமுதல்
தேர்ந்து சிறக்குங் குமர குருபரத் தம்பிரான்சொல்
பார்கொள் பெருமையைப் பெற்றது பாண்டியன் மண்டலமே.




(30)