31-40 வரை
 

ஆளும் சிவனும் புறம்பாக வாங்கவ ராளன்பர்தம்
மூளுந் திறனுங் குறும்பாக வேயிவர் முன்புவந்தால்
தாளுந்திண் டோளுந் துணிப்பே னெனவுந் தடங்கைவிடா
வாளுந் தடியுங்கொள் வேளாளர் பாண்டியன் மண்டலமே.




(31)
   

கடிமணக் கோலஞ்செய் மங்கைநற் கூந்தலைக் கண்டுசிவன்
அடியவர் பஞ்ச வடிக்கா மெனவடி யோடரிந்து
படிமிசைக் கீர்த்தி கொளக்கொடுத் தேயரன் பாற்கருணை
வடிவான மானக்கஞ் சாறனும் பாண்டியன் மண்டலமே.




(32)
   

நாமா ரடிமைவே ளாள ரடிமையெந் நாளுமென்று
கோமான் வளவன்முன் கூற வவனுரை கூறித்தென்னன்
பாவாண னாகவந் தாண்டவ னென்று பகருங்கஞ்ச
மாவார் களந்தைப் புகழேந்தி பாண்டியன் மண்டலமே.




(33)
   

பொல்லாச் சமண ரிடுந்துன்ப நீறிட்டுப் போக்கிக்கடல்
கல்லாற் கடந்து படிக்காசு வாங்கிக் கபாடந்திறந்
தெல்லாரும் பேறு பெறத்திருத் தாண்டக மேத்துமையர்
வல்லாள ராகிய வேளாளர் பாண்டியன் மண்டலமே.




(34)
   

சதுரங்கங் கொண்டு தளகர்த்த ராகித் தமையடுத்தோர்க்
கெதிர்வந்த சத்ரு சயஞ்செய்து முக்கண் இறையவர்க்கு
நிதியது கொண்டேயந் நீளடிக் கன்பாய் முனையடுவார்
மதிகொண்ட காவியங் கொண்டதும் பாண்டியன் மண்டலமே.




(35)
   

துரிசற்ற முக்கட் சிவனடி யார்தமைத் தூடித்தபே
ருருவத்து நாவை யடியறுத் தோட்டி யுலகத்திலே
பொருசத்தி யுள்ள புருடருக் குள்ளிவர் போர்ப்புகழால்
வருசத்தி யானாரும் வேளாளர் பாண்டியன் மண்டலமே.




(36)
   

ஈசனைத் தூது விடுத்தாரைக் காணி னிறப்பனென்று
பேசுவார் முன்னரவ் வன்றொண்டர் நக்கர் பிரான்வரவே
காசுறும் வாளால் வயிற்றைக் கிழித்த கலிக்காமரு
மாசற்ற தொல்குடி வேளாளர் பாண்டியன் மண்டலமே.




(37)
   

வேட்கையிற் றண்டி யடிகட் கமுதிட வேண்டிவைத்தும்
பாட்பட வேயெடுத் துண்டிடுஞ் சுற்றத்தைப் பற்றறுத்துக்
கோட்புலி யாரென் றிடுபேர்கொண் டார்முன்பு கொண்டுபெற்ற
வாட்படை யாளரும் வேளாளர் பாண்டியன் மண்டலமே.




(38)
   

காக்கு மரசன் மனைவிநற் பூவினைக் கான்முகர
மூக்கை யரிந்தரன் பாதத்தி லன்பினை முற்றுவித்த
தேக்குங் கருணை வடிவால் மிகுந்த செருத்துணையாய்
வாக்கின் பெருமைகொள் வேளாளர் பாண்டியன் மண்டலமே.




(39)
   

தேனலர் கொன்றை யணிசிவன் கோயிலைச் செம்பொன்னினால்
தூநல மாகும் பிராகாரங் கோபுரங் தூபிமுத
லூன மிலாது புரிவாயி லாரென்று முள்ளத்திலே
மானத பூசைசெய் வேளாளர் பாண்டியன் மண்டலமே.




(40)