41-50 வரை
 

புகுந்த சமயம் விடார்தேரர் ஞானமில் புல்லவரா
லுகந்தவர் போலவர்க் குள்ளாகி யின்மை யொழிக்குமருள்
மிகுந்த சிவனிடத் தன்பாகிப் பூவென மேற்கல்லினால்
மகிழ்ந்தெறி சாக்கியர் வேளாளர் பாண்டியன் மண்டலமே.




(41)
   

வேறா ருலகத் திருந்துதன் னூரினில் மேவுகின்ற
வாறாருஞ் செஞ்சடை யார்தெய்வ மென்றே யறிந்தவர்க்குந்
தேறா தவர்க்கும் தெளிய மதுரைச் சிவன்றனையம்
மாறா லடித்தவர் வேளாளர் பாண்டியன் மண்டலமே.




(42)
   

தணவா வறுபத்து மூவரிற் றாமும் முதன்மைபெற்றுப்
பணவா ரணிகின்ற பெம்மான்பொற் பாதத்தைப் பற்றவைத்துக்
குணமான சைவ நெறிநின்று வாழுங் குலச்சிறையும்
மணமேற் குடியில்வாழ் வேளாளர் பாண்டியன் மண்டலமே.




(43)
   

முதியவர் மூவர் தமிழ்கொள் சுழியல் முதிரநெல்லை
துதிசெய் பரங்குன்ற மாடானை காளையார் தூவாப்பனூ
ரெதிர்கொடுங் குன்று புனவாயில் பூவண மேடகமே
மதுரைகுற் றால மிராமேசம் பாண்டியன் மண்டலமே.




(44)
   

செய்கை தவத்த சமண்குண் டரையவர் சென்றுசெய்த
துய்யற்கு மங்கைக் கரசி குலச்சிறை யுண்மகிழ்ந்து
சைவத்தை யோங்கச்செய் சம்பந்த ரேட்டைத்தண் ணாற்றெதிரே
வையைக்கு ளேயோடச் செய்தது பாண்டியன் மண்டலமே.




(45)
   

அணிகாரைக் காலம்மை சோணாடு விட்டுவந் தங்கமேபாழ்
துணிவாய்க் கணவனோ டூடிக் கயிலை தொடரவெண்ணித்
தணிவா நடக்கும் பொழுதிலந் தாதி தனியிரட்டை
மணிமாலை கொண்டு புகழ்தரும் பாண்டியன் மண்டலமே.




(46)
   
நந்தா வடியவர் கண்டேத்த வானக நாடுவிட்டே
இந்த்ரா திகள்வந் தேபோற்றி வேண்டிய தெய்தவின்பந்
தந்தாளுஞ் சொக்க ரறுபத்து நாலு தரந்தனியே
வந்தாடல் செய்து விளையாடும் பாண்டியன் மண்டலமே.



(47)
   
திருவாத வூரரெம் மாணிக்க வாசகர் தென்னவன்முன்
வெருவாது காட்டு நரிபரி யாய்விற்க மீண்டவைதாம்
நரியாக வைகை நதிபெருக் காய்வரும் நாளிற்சொக்க
ரறியாது போய்மண் சுமந்ததும் பாண்டியன் மண்டலமே.



(48)
   

தெள்ளிய சங்கப் புலவோரும் வாணியுஞ் செஞ்சடைமே
லொள்ளிய கங்கை தரித்தோருங் கூறி யொரோர்கவிதை
வெள்ளிய செஞ்சொற் றொடர்பா வகையை வியந்துகொண்டு
வள்ளுவர் மாலை பகர்ந்தாரும் பாண்டியன் மண்டலமே.




(49)
   

கனமான மானையங் கங்கொண்டு காசிக்குப் போகையிலே
தனமான வாசையிற் சென்றங்கு தங்கவங் கம்புனைந்து
புனமான செம்ம லிறக்கிடப் போற்றுநற் பூவணமா
வனமான காசி விளங்கிய பாண்டியன் மண்டலமே.




(50)