61-70 வரை
 

அதிசய மெய்துறு சக்கர வாத்திக ளானவரு
முதிர்தமிழ் கொண்டு வரையாது நல்கு முதல்வள்ளலுட்
டுதிகொள வோங்கு நளனுஞ் சகரனுந் தொல்லுலகில்
மதிகுல மாறன் குலத்தவர் பாண்டியன் மண்டலமே.




(61)
   
தேவிக்கு மன்னவன் காப்பானென் றேகித் திரும்பிவந்து
மேவிக் கலந்த விரவினில் சோதிக்க வேந்தன் தட்டிப்
பூவிற் பொலிகைவைத் தேகிடப் பூசுரன் போந்துதர
மாவிற்கை பொற்கை தருமாறன் பாண்டியன் மண்டலமே.



(62)
   

புரிசைப் புரத்தினிற் சேரனுஞ் சோழனும் போர்புரிய
விரியச் சயங்கொண்ட போழ்தினில் யாமினி யீங்கிவனைப்
பரிசுக்கு நல்ல கவிபாடி னால்வரும் பாக்யமென்றே
வரிசைத் தமிழ்புனை பாரியும் பாண்டியன் மண்டலமே.




(63)
   

அகத்திய ரேவிட வாட்சேபஞ் செய்ததங் கோட்டுமுனி
மிகக்களி கூரப் புலவோர்கள் வாழ்த்த வியன்மதுரைச்
செகத்தர சென்பவன் முன்னேதொல் காப்பியச் செந்தமிழை
மகத்துவ மாயரங் கேற்றிய பாண்டியன் மண்டலமே.




(64)
   

பேறுதந் தாளு முமையவள் தேகப் பெருநலததைக்
கூறுஞ் சவுந்த்ர லகிரியென் றோர்தமிழ் கூறிமிக
வீறிய நல்ல கவிராச பண்டிதர் மேன்மையொன்ற
மாற னரசு புரிந்தாளும் பாண்டியன் மண்டலமே.




(65)
   

நரதுங்கன் கொண்டாடு முச்சங்கங் கூறுநற் காசிகண்ட
மரதுங்க மேசொல் இலிங்க புராணமந் நைடதஞ்செய்
கரதுங்க சீல னதிவீர ராமனுங் காசினியில்
சரதுங்க ராமனும் வாழ்வது பாண்டியன் மண்டலமே.




(66)
   

இணங்கி யுலகத்து மெண்ணியல் விண்ணோர் எழின்மடவார்
கணங்கொண்ட சாபந் தவிர்ந்தே விளங்குங் கனிமதுர
குணங்கொண்ட சேது புராணத்தைப் பாடிக் குவலயத்தில்
வணங்கும் நிரம்ப வழகியார் பாண்டியன் மண்டலமே.




(67)
   

தைந்நின்ற பாண மதவே ளெடுத்துச் சமர்புரிய
மொய்ந்நின்ற வண்டு பசுந்தே னருந்தி முகம்விரியச்
செய்ந்நின்ற பூஞ்சோலை சூழுங் கழுகு செறிசயில
மய்ந்நின்ற வானை முருகனும் பாண்டியன் மண்டலமே.




(68)
   
சேரர்க்குஞ் சோழர்க்கும் மாமுடி மீது சிகாமணியாய்ப்
பூரிக்கு மாந்தர்க ளெல்லோரும் வாரிப் புனைந்துகொள்ளப்
பாரிக்குங் கொங்கை மடவா ரெடுத்துப் பணிந்தணைய
வாரிக்கு முத்தம் விளைவான பாண்டியன் மண்டலமே.



(69)
   

சிந்திக்கும் பேறு பெறவே வருந்தியித் தேசத்திலே
தொந்திக்குஞ் சஞ்சீவி தீர்த்தத்தி லாடிச் சுரர்பணிய
அந்திப் பிறையணி யெம்மான்வந் தாட்கொண் டருளவுமே
வந்திக்கும் பாவ விமோசனம் பாண்டியன் மண்டலமே.




(70)