81-90 வரை
 

இடைக்காடர் முன்செல்லப் பின்செலு மீச னிருப்பதுபோல்
தடைக்கான காட்டினில் முட்டையென் றேபெயர்
                                   சாற்றிச்செஞ்சொற்
றொடைக்கான பாடல்பொய் யாமொழி யார்தொடுத் தேத்துமடி
மடக்கான பாடல்கொள் செவ்வேளும் பாண்டியன் மண்டலமே.





(81)
   
புண்ணியஞ் செய்தவ ரிங்கிவர் பாவம் புரிந்துலகில்
நண்ணின ரங்கவ ரென்றே வரவும்விண் ணாடுதனில்
தண்ணிய நீரில் வெளுப்புங் கறுப்பதுந் தந்தருவி
மண்ணியல் பாந்திருக் குற்றாலம் பாண்டியன் மண்டலமே.



(82)
   

குளங்கண்டு நீர்கொண்டு மஞ்சன மாடுமக் குஞ்சரத்தை
இளங்கோ கனமடு வில்வன மீனுற் றிடர்புரிய
வுளங்கொண்டு யானை யழைக்கக் கராவை யுளைசெய்தமால்
வளங்குளத் தானைநல் லூரரும் பாண்டியன் மண்டலமே.




(83)
   

தரணியில் பல்லுருச் சொக்கரில் லாத தலங்களில்லை
தெரிதரு சொற்றமிழ் சொல்லாத தெய்வமும் தேசத்திலை
பொருள்பெறுஞ் சங்கப் புலவரைப் போலப் புலவரில்லை
வருசெய லாலிவண் முற்படும் பாண்டியன் மண்டலமே.




(84)
   

கடைசியில் யாவருங் கண்டு தொழுஞ்சீர்க் கணங்களவை
புடைசெய் கருவூரிற் றோன்றிய சித்தர் புகுந்தழைக்க
உடல்மகிழ்ந் தாமென்று சேர்த்துக் கொளவெனச்
                                 சேர்த்துக்கொண்டு
மடமயி லோர்பங்க ரார்வது பாண்டியன் மண்டலமே.





(85)
   

பலர்புகழ் கம்ப ருமையுட னீயுமொப் பாயென்றது
முலவிய சம்பந்தர் மங்கைக் கரசியென் றோதியதும்
நிலவிய பாண்டியர்க் கன்றியிந் நீணில நேரியர்க்கும்
மலைபெறு சேரர்க்கு மில்லெனும் பாண்டியன் மண்டலமே.




(86)
   

தாக்கரி தான விராவண னைக்கொன்று தாசரதி
போக்கரி தாகிய பாதகம் போக்கிப் புவியிற்கங்கை
தேக்கிய நீரன்றிப் பூசைகொள் ளாதுசெய் சேதுவெனும்
மாக்கடல் சூழு மிராமேசம் பாண்டியன் மண்டலமே.




(87)
   

வக்கை நகராளு மாட்கொண்டா னைந்தா மறையெனவே
யெக்கணுஞ் சொல்பா ரதஞ்சனி யூர்வில்லி யேந்திசையோன்
தக்க தமிழிசை யாற்பாடச் செய்தேயித் தாரணியில்
மிக்க பரிசு கொடுத்ததும் பாண்டியன் மண்டலமே.




(88)
   

துரியோ தனன்கன்ன னச்சுவத் தாமன் றுரோணனொடு
பொருபாண் டவர்க்குச் சயமெனும் பாரதப் போர்முடித்துத்
திருமேவு பாக வதம்புரி லீலையும் செய்மதுரை
வருமா லெதுகுலக் கிட்டினன் பாண்டியன் மண்டலமே.




(89)
   

ஏழிசை யாரை யெடுத்துத் தரைமிசை யேத்துகவி
ஆழிசங் கத்தார் புகழ்பாடல் கொண்டே யவனியிலே
மேழியி னால்வளர் வேளாளர் யாரு வியந்திருந்து
வாழி வளம்பெற வாழ்வதும் பாண்டியன் மண்டலமே.




(90)