91-100 வரை
 

லியவரை வென்றுநற் சாதாரி பாடிமுன் வெள்ளிமன்றில்
நயமுட னாடிப் பொருளதி காரம் நவின்றசொக்கர்
தயவுடன் யாவரு மின்ப முறுமத் தனப்பொருளை
யியலிசை நாடக மாச்சொன்ன பாண்டியன் மண்டலமே.




(91)
   

கல்லாடம் சிற்றம் பலக்கோவைக் கொப்பக் கடம்பவனத்
தெல்லோருங் கொண்டேத்து வாரலா திந்தமேல் காரிகைக்குத்
துல்லிய சங்கத்தார் கொண்ட வுரைநற சுருதியெனச்
சொல்லிய வேளாளர் சூழ்வதும் பாண்டியன் மண்டலமே.




(92)
   

திருமிக்க சேரற் கரசு பெறத்தமிழ் செப்பிடவுந்
தருமிக்கு மிக்கசுத் தித்தமிழ் கொங்கென்று தான்சொலவும்
கருணைக் கடல்நங் கடம்பா டவியிற் கலந்திருக்க
வரிசைப் புலமை செலுத்திய பாண்டியன் மண்டலமே.




(93)
   

பாட்டொன்று பாடிப் பதினாறு கோடி பரிசுபெற்றுத்
தீட்டும் பதினாறு நூறா யிரம்பொனார் செந்தமிழ்க்கு
வேட்டு வளவன்றன் சங்கத்தி லேறி வியந்திருந்து
வாட்ட மிலாது களிகூரும் பாண்டியன் மண்டலமே.




(94)
   

மும்மண் டலத்திலும் பாண்டியன் மண்டல முக்யமென்ப
விம்மண் டலத்திலெல் லோருமே போற்றி யியம்பவல
னம்மண் டலஞ்செய் சவுந்தர பாண்டிய னாரரசு
மம்மர் தவிர்ப்பதன் றோவெனும் பாண்டியன் மண்டலமே.




(95)
   

காசிக்குஞ் சேதுவுக் கும்புக ழேபெறக் கற்றவரும்
பூசிக்க யாரு முபாசிக்க நேசிக்கும் பூதியினால்
தேசிற் சிதம்பரத் தேநிலை நிற்கச்செய் தேசிறந்த
மாசற்ற கல்மடம் வேளாளர் பாண்டியன் மண்டலமே.




(96)
   

தண்டாநா டாண்ட வழகுபட் டாரிமன் தன்னாட்டிலே
மண்ணாளும் காரைக்காட் டார்தம் மரபினில் மங்கைதனைப்
பண்கேட்ட மன்னற்குப் பெண்ணா யழகாரப் பந்தலிலே
மண்காணக் கட்டிய வேளாளர் பாண்டியன் மண்டலமே.




(97)
   
தென்கும ரிக்கும் வடக்குவெள் ளாற்றுக்குந் தெற்குவரு
மன்புறு திண்டுக்கல் லுக்குங்கா ரைக்காட்டிற் குங்கிழக்கா
யன்புறு சேதுவின் மேற்கான வெல்லைக்கு ளானதெல்லாம்
வன்பெரு மாறன் புரக்கின்ற பாண்டியன் மண்டலமே.



(98)
   
தள்ளருந் தேவர்கட் கெல்லாம் விநாயகர் தாமுயர்ந்து
பிள்ளையென் றேபெயர் பெற்றா ரதுகண்டிப் பேருலகி
லுள்ளவே ளாளரில் பாண்டிவே ளாள ருயர்வரென்றே
வள்ளியப் பிள்ளைப் பெயரேகொள் பாண்டியன் மண்டலமே.



(99)
   
அங்கமும் வாழச் சுரர்வேத மந்தணர் ஆப்பெருகச்
செங்கையிற் கோல்செலுத் தும்நல்ல தம்பி சிறக்கும்நல்ல
கங்கா குலபதி முன்னே யிசையாரும காதைதன்னை
மங்கள மாய்க்கேட் டவர்வாழி பாண்டியன் மண்டலமே.



(100)
   
காப்பு

திங்கண்மும் மாரி பெய்யத் தென்னவன் செங்கோ லோங்க
மங்களம் பொலியும் பாண்டி மண்டல சதகம் வாழ்க
சங்கமா மதுரை மூதூர்ச் சங்கரர் சடையின் மீதிற்
கங்கையார் பெற்ற சித்திக் கணபதி காப்புத் தானே.






(1)
   
காப்பு

தண்டமிழ் வழங்கத் தென்னன் றனிச்செங்கோல் தழைக்கப் பாண்டி
மண்டல சதக மென்னும் வடிதமிழ் வளர்ந்து வாழ்க
அண்டர்கள் முனிவோர் மாந்தர்க் கருள்செய வமிர்த ரூபங்
கொண்டவர் பரங்கொண் டாளுங் குமரனை வணக்கஞ் செய்வாம்.(2)

   
அவை அடக்கம்

ஆண்டவர் தந்த சங்கத் தமர்ந்தவர்க் கடங்காக் கீர்த்திப்
பாண்டிமண் டலத்தைத் தானே பாடுவேன் பாவை பங்கர்
தாண்டவ மாடு வார்முன் பேயாடித் தடுப்ப தேபோற்
பூண்டபே ரரவின் முன்னம் பூநாக மாடல் போலும்.    

(3)
   
சிறப்புப்பாயிரம்-நூல் செய்தார்

பழுதில் மதுரைப் பதிவீர பூபதி பாலனுயர்
வழுதி புரக்கின்ற தென்பாண்டி நாட்டினை வண்மைபெற
வுழுது தழைக்கின்ற வேளாளர் தம்மை யுயர்வரென
வெழுதும் பெருமான் புவிநல்ல தம்பியெங் காங்கேயனே.

(4)
   
நூல் செய்தார்

வளங்கொ ளரிய நயினாந்தை யார்தொண்டை மண்டலத்தை
விளங்கும் வடமலை தென்காரைக் காட்டை மிகவுயர்த்தார்
நளம்பெறு மையம் பெருமாள்தென் பாண்டிநன் னாட்டினில்வந்
துளங்கொள வோங்கிய வேளாளர் தம்மை யுயர்த்தினனே.

(5)