யானைமுகன் வணக்கம்

9.காரணகா ரியங்களின்கட் டறுப்போர் யோகக்
     கருத்தென்னுந் தனித்தறியிற் கட்டக் கட்டுண்டு
ஆரணமா நாற்கூடத் தணைந்து நிற்கும்
   ஐங்கரத்தது ஒருகளிற்றுக்கு அன்பு செய்வாம்.
    
10.தனித்தனியே திசையானைத் தறிக ளாகச்
     சயத்தம்பம் பலநாட்டி ஒருகூ டத்தே
அனைத்துலகுங் கவித்ததெனக் கவித்து நிற்கும்
   அருட்கவிகைக் கலிப்பகைஞன் வாழ்கவென்றே.

   
(பொ-நி.)  சயத்தம்பம்   பல   நாட்டி,  கவித்து  நிற்கும்  கவிகைக் கலிப்பகைஞன் வாழ்க என்று, கட்டுண்டு, நாற்கூடத்து  அணைந்து நிற்கும்
ஒரு களிற்றுக்கு அன்பு செய்வாம்; (எ-று.)

    (வி-ம்.) காரண  காரியக்கட்டாவது  அகப்பற்றும் புறப்பற்றும்; அவை
உடல்  மனைவி  மக்கள்மேல்  உண்டாவன.   கட்டறுப்போர் - யோகியர்.
யோகம்-மன ஒருமைப்பாடு. தறி-கட்டுத்தறி. ஆரணம்- மறை. கூடம்-யானை
கட்டுமிடம். தறி-தூண். சயத்தம்பம் - வெற்றித்தூண்.  வெற்றி பெற்றமைக்கு
அடையாளமாகக்  கல்தூண்  நிறுவிவைப்பது.  கூடம் -  அண்டகோளகை
கவிதை  -  குடை,    குடைக்கு  அண்டகோளகை  உவமையாம்  என்க.
கலிப்பகைஞன் -  துன்பத்தை ஒழிப்போனாகிய  குலோத்துங்கன். அபயன
புகழ் மேம்பாடு குறிக்கப்பட்டது.                              (9, 10)