இதுவும் அது

 111.அடிக்கழுத்தின் நெடுஞ்சிரத்தை அரிவ ராலோ
      அரிந்தசிரம் அணங்கின்கைக் கொடுப்ப ராலோ
கொடுத்தசிரம் கொற்றவையைப் பரவு மாலோ
     குறையுடலம் கும்பிட்டு நிற்கு மாலோ.

     (பொ-நி.) சிரத்தை  அரிவர்;  அரிந்த  சிரம்  கொடுப்பர்; கொடுத்த
சிரம் பரவும்; குறை உடலம் கும்பிட்டு நிற்கும்; (எ-று.)

     (வி-ம்.)  அடிக்கழுத்து - கழுத்தின் முதலிடம்.  அரிவர் - அறுப்பர்.
அணங்கு-காளி.  கொற்றவை - காளி.  பரவும் - துதிக்கும்.  குறை  உடலம்
-தலையற்ற  உடம்பு.                                          (15)