இணையடிச் சிறப்புக் கூறியது

122.ஒருமலை மத்துவலித்து உலவுக யிற்றினுமற்று
    உலகுப ரித்தபணத்து உரகவ டத்தினும்அப்
பருமணி முத்துநிரைத்து உடுமணி தைத்தஇணைப்
   பரிபுரம் வைத்ததளிர்ப் பதயுக ளத்தினளே.

     (பொ-நி.) கயிற்றினும்வடத்தினும் முத்து நிரைத்து மணிதைத்த பரிபுரம்
வைத்த பதத்தினள்; (எ-று.)

     (வி-ம்.) மலை-மந்தரமலை. மத்து - தயிர்கடைமத்து. வலித்து- மேலே
சுற்றி. கயிறு-கயிறாயிருந்த வாசுகி. பரித்தல்-தாங்குதல். பணம்- படம். உரகம்-(ஆதிசேடனாகிய)  பாம்பு.  அ -அழகிய.  உடுமணி(யாகிய)பருமணி  முத்து நிரைத்துத் தைத்த என  இயைக்க. மணிமுத்து - அழகிய முத்து. உடுமணி -வானமீன்கள். இணை- இரண்டு. பரிபுரம் - சிலம்பு. உகளம்- இணை. 'உகள
பதத்தின்' என விகுதி பிரித்துக் கூட்டுக.                           (2)