உடைச் சிறப்புக் கூறியது

125.பரிவக லத்தழுவிப் புணர்கல விக்குருகிப்
       படர்சடை முக்கணுடைப் பரமர்கொ டுத்தகளிற்று
உரிமிசை யக்கரியிற் குடரொடு கட்செவியிட்டு
      ஒருபுரி இட்டுஇறுகப் புனையுமு டுக்கையளே.

     (பொ-நி.)  பரமர்  கலவிக்கு  உருகிக்கொடுத்த  களிற்று  உரிமிசை,
ஒருபுரி இட்டு இறுகப் புனையும் உடுக்கையள்; (எ-று.)

     (வி-ம்.) பரிவு - காமத்துன்பம்.  கலவி - ஒன்றுபட்ட  இன்பம். படர்
-விரித்த. பரமர் - சிவனார்.  உரி - தோல்.  கரி - யானை.  குடர் - குடல்;
ஈற்றுப்போலி, கட்செவி-பாம்பு. புரி-முறுக்கிய கயிறு. உடுக்கை - அரைக்கச்சு.
                                                            (5)