மேலாடைச் சிறப்புக் கூறியது

127.கவளம தக்கரடக் கரியுரி வைக்கயிலைக்
      களிறுவி ருப்புறும்அக் கனகமு லைத்தரளத்
தவளவ டத்திடையிற் பவளமொ டொத்தெரியத்
     தழலுமிழ் உத்தரியத் தனிஉர கத்தினளே.

      (பொ-நி.) கயிலைக்களிறு விருப்புறும் முலைத்  தரளவடத்திடையில்
பவளமொடு ஒத்து எரிய தழல் உமிழ் உரகத்தினள். (எ-று.)

      (வி-ம்.) கவளம்-உணவுருண்டை.  மதக்கரடம்-மத நீர்  வரும் சுவடு.
கயிலைக் களிறு-சிவன். கனகம்-பொன்.  தரளம்-முத்து.  தவளம்-வெண்மை.
வடம் - மாலை.  உத்தரியம் - மேலாடை.  உரகம்-பாம்பு.  உமிழ்  உரகம்,
உத்தரியமாகிய உரகம் எனத் தனித்தனி இயைக்க.                  (7)