உதட்டின் சிறப்புக் கூறியது

129.சிமையவ ரைக்கனகத் திரளுரு கப்பரவைத்
      திரைசுவ றிப்புகையத் திசைசுடு மப்பொழுதத்து
இமையவ ரைத்தகைதற்கு இருளுமி டற்றிறைவதற்கு
     இனியத ரத்தமுதக் கனியத ரத்தினளே

     (பொ-நி.) திரள் உருக, திரை புகைய, திசை  சுடும்  அப்பொழுது,
இருளும் மிடற்று இறைவற்கு அமுதக்கனி அதரத்தினள்; (எ-று.)

     (வி-ம்.) சிமையக்கனவரைத்திரள் என இயைக்க. சிமையம்-கொடுமுடி.
கனகவரை-மேருமலை. திரள் - கூட்டம்.  பரவை - கடல்.  திரை - அலை.
அப்பொழுது- ஆலகாலவிடம்  எழுந்தபொழுது.  இமயவர்-தேவர். தகைதல்
-(விடம்பற்றாமல்)அடக்கல், மிடறு-கழுத்து,  இறைவன்-சிவன்,  தரம்-தன்மை.
கனி-கொவ்வைக்கனி,  அதரம்-உதடு.                             (9)