நாமகள் வணக்கம்

13.பூமாதுஞ் சயமாதும் பொலிந்து வாழும்
     புயத்திருப்ப மிகவுயரத் திருப்பள் என்று
நாமாதும் கலைமாதும் என்னச் சென்னி
   நாவகத்துள் இருப்பாளை நவிலு வாமே.
 
14. எண்மடங்கு புகழ்மடந்தை நல்லன் எங்கோன்
     யானவன்பால் இருப்பதுநன் றென்பாள்போல
மண்மடந்தை தன்சீர்த்தி வெள்ளை சாத்தி
   மகிழ்ந்தபிரான் வளவர்பிரான் வாழ்க வென்றே.

  
   
(பொ-நி) புகழ்மடந்தை "நல்லன்;  இருப்பது  நன்று"  என்பாள்போல,
மண்மடந்தை,  வெள்ளைசாத்தி  மகிழ்ந்தபிரான்  வாழ்க  என்று, பூமாதும்
சயமாதும்  புயத்திருப்ப,  உயரத்திருப்பளென்று,  நாவகத்துள் இருப்பாளை,
நவிலுவோம்; (எ-று.)

   
(வி-ம்.) நான்முகன்   நாவினும்   புலவர்   நாவினும்   உறைதலாற்
கலைமகள் நாமகளெனப்பட்டாள். பூமாது-மண்மகள். சயமாது -வெற்றிமகள்.
என்று  இருப்பாளை,  என்ன  இருப்பாளை  எனத்  தனித்தனி இயைக்க.
சென்னி-குலோத்துங்கன்,  நவிலுவோம்-துதிப்போம்.   எண்மடங்கு-மற்றை
யரசர்களினும்  எட்டு  மடங்கு.   மண்மடந்தைக்குச்  சாத்தினான்  என்க.
மண்மடந்தை - நிலமாகிய மகள்.  சீர்த்தி-மிகுபுகழ்.  வெள்ளை-வெள்ளை
நிறத் தூய ஆடை; ஈண்டு ஆகுபெயர். ஈண்டும் அபயன் புகழ் மேம்பாடு
குறிக்கப்பட்டது.                                         (13, 14)