சிவ வணக்கம் 

1.புயல்வண்ணன்  புனல்வார்க்கப்  பூமிசையோன் 
     தொழில்காட்டப் புவனவாழ்க்கைச் 
செயல்வண்ணம் நிலைநிறுத்த மலைமகளைப்
    புணர்ந்தவனைச் சிந்தை செய்வாம்

                
2. அருமறையின்  நெறிகாட்ட அயன்பயந்த
     நிலமகளை அண்டங் காக்கும் 
உரிமையினிற் கைப்பிடித்த உபயகுலோத்
   தமனபயன் வாழ்க வென்றே.
 

    (பொருள் நிலை.)  அருமறையின்    நெறி    காட்ட,   நிலமகளை
உரிமையினிற்  கைப்பிடித்த   அபயன்   வாழ்க என்று, புவன வாழ்க்கைச்
செயல்  வண்ணம்   நிலைநிறுத்த,     மலைமகளைப்    புணர்ந்தவனைச்
சிந்தை   செய்வாம்;(என்றவாறு).

    (விளக்கம்.)   புனல்வார்க்க,    தொழில்காட்ட,  புணர்ந்தவன்  என 
முடிக்க,  புயல்வண்ணன்;     திருமால்,     நீருண்ட    கரிய    முகில்
போன்ற  நிறத்தினராகையால   திருமால்  புயல்வண்ணன் என்னப்பட்டார்.
புனல்-நீர்,   பூமிசையோன்:    பிரமன்.   தொழில்:   திருமணச்  சடங்கு.
புவனம்  -  உலகம்.  வாழ்க்கை  -  இல்லற    வாழ்க்கை.  வண்ணம் -
தன்மை.    மலைமகளைப்  புணர்ந்தவன்:  சிவன்:  மறை நெறி-வேதநெறி,
ஒழுக்க   நெறி.   அயன்  -   பிரமன்.  அண்டங்காக்கும்    உரிமை  -
உலகைக்   காக்கும்    உரிமை.   உபய  குலோத்தமன் - தாய் தந்தையர்
குலத்துக்கு  மேன்மையை  உண்டாக்கிய  முதற்  குலோத்துங்க   சோழன்.
தாய்     வழி    உரிமையில்    சோழ    அரசை  அடைந்தானாதலின்,
தந்தை    குலத்தையே   அன்றித்   தாயின்   குலத்தையும்    விளங்கச் 
செய்தான்.       குலோத்துங்கன்       உலகில்      நல்லொழுக்கத்தை
நிலைநிறுத்தியது குறிக்கப்பட்டது.                              (1, 2)