இராசமகேந்திரன் சிறப்புக் கூறியது     

205.பனுவலுக்கு முதலாய வேத நான்கில்
   பண்டுரைத்த நெறிபுதுக்கிப் பழையர் தங்கண்
மனுவி னுக்கு மும்மடி நான் மடியாஞ் சோழன்
  மதிக்குடைக்கீ ழறந்தளிர்ப்ப வளர்ந்த வாறும்,

     (பொ-நி.) நெறி புதுக்கி, நான்மடி ஆம் சோழன் குடைக்கீழ் அறம்
வளர்ந்த ஆறும்; (எ-று.)

     (வி-ம்.) பனுவல்-நூல். முதல் ஆய-முதன்மையான. பண்டு-முன்பு.
புதுக்கி-புதுப்பித்து. மும்மடி-மூன்று மடங்கு. ஆம் -சிறந்தவன் ஆகிய;
சோழனது குடை என்க. அறம் தளிர்ப்ப-அறம் தழைக்கும்படி.     (28)