காளி குலோத்துங்கனை நினைந்து மகிழ்தல் கூறியது      

210.வையகமாங் குலமடந்தை மன்னபயன்
    தன்னுடைய மரபு கேட்டே
ஐயனையான் பெற்றெடுத்த அப்பொழுதும்
   இப்பொழுதொத் திருந்த தில்லை.

     (பொ-நி.) அபயன்  மரபுகேட்டு,  இப்பொழுது   ஒத்து பெற்றெடுத்த
அப்பொழுதும் இருந்ததில்லை; (எ-று.)

      (வி-ம்.) வையகம்- உலகம். குலம்-மேன்மை. மன்-தலைவன். அபயன்-
குலோத்துங்கன்.  மரபு- குலமுறை. ஐயன்:  குலோத்துங்கன், அப்பொழுதும் -
அவனைப் பெற்றெடுத்த அக்காலத்தும். இப்பொழுதும்-இப்பொழுது அடையும்
மகிழ்ச்சி. காளி குலோத்துங்கன் புகழைக் கேட்டதும் தன் மகனாகக் கொண்டு
பெற்றகாலத்துப் பெற்ற மகிழ்ச்சியினும் இப்போது பன்மடங்குமகிழ்கூர்ந்ததாகக்
கூறினாள்; ‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்  தன்மகனைச்  சான்றோன் எனக்
கேட்ட தாய்' என வள்ளுவனாரும், ‘ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே'

      என,  ஒக்கூர்  மாசத்தியாரும்  கூறும் கருத்துரைகள், தாய்மையன்பின்
நிலைக்கு இதனோடு ஒத்த கருத்தாதலை அறிந்தின்புறுக.              (33)