குலோத்துங்கன் நடைபயின்றமை      

240.சினப்புலிவ ளர்ப்பதொர்
    சிறுப்புலியு மொத்தே
திசைக்களிற ணைப்பதொர்
  தனிக்களிறு மொத்தே
அனைத்தறமும் ஒக்கஅடி
  வைக்கஅடி வைத்தே
அறத்தொடும றத்துறை
  நடக்கநடை கற்றே.

     (பொ-நி.)  புலியும்  ஒத்து;  களிறும்  ஒத்து,   அறம்  அடிவைக்க
அடிவைத்து, மறத்துறை நடக்க நடைகற்று. (எ-று.)

     (வி-ம்.) சிறுப்புலி  -  புலிக்குட்டி. அணைப்பது -  தழுவிவளர்ப்பது.
ஒக்க -  குலோத்துங்கனோடு  ஒரு  சேர.  மறத்துறை - வீரச் செயல்களின் 
பகுதிகள். நடக்க-உலகத்தே  நடக்க, நடைகற்று - நடக்கப் பழகி.       (9)