குலோத்துங்கன் சோழநாடு எய்தியமை

261.கலியிருள் பரந்த காலைக்
      கலியிருள் கரக்கத் தோன்றும்
ஒலிகடல் அருக்க னென்ன
     உலகுய்ய வந்து தோன்றி,

     (பொ-நி.)  இருள்  பரந்த  காலை,   இருள்  கரக்கத் தோன்றும்
அருக்கன் என்ன வந்து தோன்றி; (எ-று.)

     (வி-ம்.)கலி - துன்பம்.  பரந்த காலை - பரவிய காலத்தில். ஒலி-
ஓசையுடைய.   கரத்தல்   -   மறைதல்.   அருக்கன் - ஞாயிறு. உய்ய-
பிழைக்கும்படி.                                            (30)