பொய்த்துயில் நிலை கூறி விளித்தது

28. இத்துயில் மெய்த்துயிலே என்றுகு றித்திளைஞோர்
    இதுபுல விக்குமருந் தெனமனம் வைத்தடியில்
கைத்தலம் வைத்தலுமே பொய்த்துயில் கூர்நயனக்
    கடைதிற வாமடவீர் கடைதிற மின்திறன்.
      (பொ-நி) இளையோர்   "மெய்த்துயிலே"   என்று  குறித்து,  மனம்
வைத்து,    கைத்தலம்    வைத்தலும்,  நயனக்கடை    திறவா   மடவீர்
திறமின்; (எ-று)

     (வி-ம்.) துயில் - தூக்கம்.  மெய்த்துயில் - உண்மையான  உறக்கம்.
குறித்து-நினைத்து. இது-அடியிற் கைத்தலம் வைத்தல். புலவி-ஊடல். மனம்
வைத்து-எண்ணி. அடி-பாதம். கைத்தலம் வைத்தல்-கைவைத்துப் பிடித்தல்.
பொய்த்துயில்   கூர்  -   பொய்யுறக்கங்  கொள்கின்ற.   நயனம் - கண்.
மெய்த்துயிலே  என்று  கருதிப்  புலவி தீர்க்கப் பாதத்தைக் கையால் வலி
தீர்ப்பான்  போல்  பிடித்தான் என்க. அடியில் என்பதற்கு வேறு பொருள்
கூறுவாரும் உளர்.                                            (8)