மன்னர்கள் புறத்தே இருக்க, அகத்தே
அமைச்சரோடு இருந்தமை

327.மண்ட லீகரும் மாநில வேந்தரும்
      வந்து ணங்கு கடைத்தலை வண்டைமன்
தொண்டை மான்முதல் மந்திரப் பாரகர்
     சூழ்ந்து தன்கழல் சூடி இருக்கவே.

    (பொ-நி.) மண்டலீகரும்  வேந்தரும் கடைத்தலை  (இருக்க), மந்திரப்
பாரகர் தன்கழல் சூடி இருக்க; (எ-று.)

     (வி-ம்.)  மண்டலீகர் - நாட்டின்  பிரிவாகிய   மண்டலத்தலைவர்கள்.
மாநிலம்-மிக்க நாடு. வேந்தர்-பேரசர். உணங்குதல்-வருந்துதல். கடைத்தலை-
வாயில்.  ஆணைபெற்றன்றி  உள்ளே  புகமுடியாதாதலால்  உணங்குகடைத்
தலையாயிற்று.  "கடைத்தலை இருக்க"  என  "இருக்க"  என்பது ஈரிடத்தும்
இயைந்தது; வண்டை-ஒரு நகரம். வண்டையன் ஆகிய தொண்டைமான் என்க.
தொண்டைமான்-கருணாகரத் தொண்டைமான். மந்திரப்பாரகர் - சூழ்ச்சிவல்ல
அமைச்சர். மந்திரம்-சூழ்ந்து என்க. பாரகர்-கரைகண்டவர். கழல்-பாதம்.
                                                          (16)