மன்னர்கள் ஆணைபெற்று உள்புகுந்தமை

328.முறையி டத்திரு மந்திர வோலையாள்
      முன்வ ணங்கி முழுவதும் வேந்தர்தம்
திறையி டப்புற நின்றனர் என்றலும்
     செய்கை நோக்கிவந் தெய்தி யிருக்கவே.

     (பொ-நி.) முறையிட,  மந்திர  ஓலையாள்  வணங்கி,  வேந்தர்  புறம்
நின்றனர் என்றலும், செய்கை நோக்கி வந்து எய்தி இருக்க; (எ-று.)

     (வி-ம்.) முறையிட - அரசர்கள்  முறையிட.  திருமந்திர  ஓலை ஆள்
அரசன் கட்டளைகளை  எழுதி   நிறைவேற்றுவோன். முன் -குலோத்துங்கன் 
முன். திறைஇட-கப்பம்  செலுத்த.  திறைமுழுவதும் என  இயைக்க. செய்கை-
உடன்பட்ட செய்கை. எய்தி-குலோத்துங்கனை எய்தி.                 (17)