புணர்ச்சி நிலை கூறி விளித்தது

33. அவசமுற் றுளம்நெகத்  துயில்நெகப் பவளவாய்
    அணிசிவப்  பறவிழிக் கடைசிவப் புறநிறைக்
கவசமற்று இளநகைக் களிவரக் களிவரும்
   கணவரைப் புணருவீர் கடைதிறந் திடுமினோ.

    (பொ-நி) உளம்நெக, துயில்நெக, வாய்சிவப்புற, விழிக்கடை சிவப்புற, களிநகை வர புணருவீர் திறந்திடுமின்; (எ-று.)

     (வி-ம்.) அவசம் - பரவசம். நெக - இளக. துயில் - தூக்கம்.  நெக-
தொலைய.  அற-நீங்க.  சிவப்புற-செம்மை  நிறம் கொள்ள. நிறைக்கவசம்-
நிறையாகிய   மனக்கட்டு.   அற்று-அழிந்து.  களி-களிப்பால்.  இளநகை-
புன்முறுவல். களிவரும் - களிப்படையும்.  புணர்ச்சியில்  ஊடல் வேறுபாடு
கூறியவாறு.  காமவேட்கை  கொண்ட  மகளிர்  அச்சம்  நாணம் முதலிய
மகடூஉக் குணங்களை யிழத்த லியல்பாதலால் 'நிறைக் கவசமற்று' என்றார்.(13)