காமமயக்கநிலை கூறி விளித்தது

35.  நனவினிற் சயதரன் புணரவே பெறினுநீர்
     நனவெனக் தெளிவுறாது அதனையும் பழையஅக்
கனவெனக் கூறுவீர் தோழி மார் நகைமுகங்
   கண்டபின் தேறுவீர் கடைதிறந் திடுமினோ.

     (பொ-நி) புணரவே  பெறினும், நனவெனத் தெளிவுறாது, கனவெனக்
கூறுவீர்; நகைமுகம் கண்டபின் தேறுவீர் திறந்திடுமின், (எ-று.)

     (வி-ம்.) நனவு - விழித்திருக்கும்  நேரம்.  சயதரன்-குலோத்துங்கன்.
தெளிவுறாது - தெளியாமல். அது - புணர்ச்சி. நகை -நனவைக் கனவெனக்
கூறியதைக்கேட்டு எள்ளி ஆடிய நகை. தேறுவீர்- தெளிவீர்.  நனவையும்
கனவென   மயங்கினர்.   இவ்வாறு  மயங்கக்காரணம்  பழைய  கனவை
இடைவிடாது   எண்ணியிருந்தமையே   என்க.                   (15)