யானைப்படையின் சிறப்பு

350.கடல்க ளைச்சொரி மலையுள எனஇரு
      கடத டத்திடை பொழிமத முடையன
கனல்வி ளைப்பன முகிலுள எனவிழி
     கனல்சி னத்தன கரியொடு பரிகளின்.
உடல்பி ளப்பன பிறைசில வுளஎன
     உயர்ம ருப்பின உலகுகள் குலைதர
உருமி டிப்பன வடவனல் உளவென
     ஒலிமு கிற்கட கரிகளும் மிடையவே.

     (பொ-நி.) பொழி மதமுடையன, விழிகனல் சினத்தன, உயர் மருப்பின,
முகில் கடகரிகளும் மிடைய; (எ-று.)

     (வி-ம்.) கடல் - கடல்நீர். கடம் - யானையின் கன்னம். கனல்-நெருப்பு.
முகில் - மேகம்.  பிளப்பனவாகிய பிறை  என்க. மருப்பு-யானையின் தந்தம்.
உரும்  - இடி.  இடிப்பன (ஆகிய)  முகில்  என  இயைக்க.  வட  அனல்-
வடவைக்கனல்.என என்று சொல்லும்படி இருக்கின்ற. கடகரி-மதயானை.
                                                         (39)