குதிரைப் படையின் சிறப்பு

351.முனைகள் ஒட்டினர் முடியினை யிடறுவ
      முடியின் முத்தினை விளைபுக ழெனநில
முதுகில் வித்துவ நிலமுறு துகளற
     முகின்மி திப்பன முகில்விடு துளியொடு
கனைக டற்றிரை நிரையென விரைவொடு
     கடலி டத்தினை வலமிடம் வருவன
கடலி டத்திறும் இடியென அடியிடு
     கவன மிக்கன கதழ்பரி கடுகவே.
 
    (பொ-நி.) முடியினை இடறுவ,  முத்தினை  வித்துவ, முகில் மிதிப்பன,
இடத்தினை வலம் இடம் வருவன, கவனம் மிக்கன, பரிகடுக: (எ-று.)

     (வி-ம்.)  முனை-போர்முனை.  ஒட்டினர்-சூளுரைத்தோர்.  முடி-தலை.
முடி-தலையணி.  இடறுவ-எற்றுவன.   விளைபுகழ்-பெருகுகின்ற  தன்  புகழ்.
நிலமுதுகு-நிலத்தின்  மேற்புறம்.  வித்துவ-விதைப்பன.  துகள்-புழுதி. முகில்-
மேகம். திரைநிரை-அலையின் வரிசை. கடலிடம்-கடலால் சூழப்பட்ட உலகம்.
இறுத்தல்-வந்து பொருந்துதல்.  கவனம்- நடை.   கதழ்வு-விரைவு.  பரிகடுக-
குதிரைகள் செல்ல.                                          (40)