காலாட்படையின் சிறப்பு

353.அலகில் வெற்றியும் உரிமையு மிவையென
      அவய வத்தினில் எழுதிய அறிகுறி
அவையெ னப்பல வடுநிரை யுடையவர்
     அடிபு றக்கிடில் அமரர்தம் உலகொடிவ்

  உலகு கைப்படும் எனினும தொழிபவர்
      உடல்ந மக்கொரு சுமையென முனிபவர்
உயிரை விற்றுறு புகழ்கொள உழல்பவர்
     ஒருவ ரொப்பவர் படைஞர்கள் மிடையவே.

     (பொ-நி.)  வடுநிரை  உடையவர்,  அது  ஒழிபவர், உடல் முனிபவர்,
புகழ்கொள உழல்பவர், ஒருவர் ஒப்பவர். படைஞர்கள் மிடைய, (எ-று.)

     (வி-ம்.)என-என்று கண்டோர் சொல்லவும்.அவை-வடுக்கள்.வடுநிரை-
வடுவரிசைகள். புறக்கிடல்-பின்னிடல். அது-புறமிடல். முனிபவர்-வெறுப்பவர்.
உழல்பவர் -முயல்பவர்.   ஒருவர்  ஒப்பவர்-ஒருவரை  ஒருவர்  ஒப்போர்.
மிடைய-நெருங்கிச் செல்ல. படைஞர்-படைவீரர்.                    (42)