போர்மேற் செல்லல்

366. மறித்தோடி யெவ்வரசுஞ் சரிய வென்று
       வருமனுக்கைப் பல்லவர்கோன் வண்டை வேந்தன்
எறித்தோடை இலங்குநடைக் களிற்றின் மேற்கொண்
     டிரைவேட்ட பெரும்புலிபோல் இகன்மேற் செல்ல.

    (பொ-நி.) பல்லவர்கோன் வண்டை வேந்தன் களிற்றின் மேற்கொண்டு
இகன்மேற் செல்ல, (எ-று.)

     (வி-ம்.) மறித்து - புறமுதுகிட்டு.  சரிய -உடைந்தோட-எவ்வரசும் ஓடி,
சரிய,வென்று,  வரும்  என  இயைக்க.   அனுக்கை - (குலோத்துங்கனிடம்) புறப்பட்டுச்செல்லப்பட்ட ஆணை. ஓடை  எறித்து  இலங்கு  என  இயைக்க.  ஓடை -நெற்றிப்பட்டம். நடை -விரைந்த நடை. இரைவேட்ட-தான் உண்ணும் இரையைவிரும்பிய. பெரும்புலி - பெரிய புலி. இகல் - போர்.        (55)