கலிங்கர்கோன் போர்மேற் செல்லக் கூறியது

393.வேழமிர தம்புரவி வெம்படைஞர்
      என்றினைய நம்படைவி ரைந்து கடுகச்
சோழகுல துங்கன்விட வந்துவிடு
     தண்டினெதிர் சென்றமர்தொ டங்கு கெனவே.

     (பொ-நி.) துங்கன் விட  வந்துவிடு தண்டின் எதிர்,  நம்படை,  அமர்
தொடங்குக என; (எ-று.)

     (வி-ம்.)  வேழம் - யானைப்படை.  புரவி - குதிரைப்படை.  துங்கன்:
குலோத்துங்கன். வந்துவிடு-வந்து இறுத்த. தண்டு-சேனை. அமர் தொடங்குக-
போர் தொடங்குவதாக.                                      (82)