யானைப் போர்
 
411.மருப்பொடு மருப்பெதிர் பொருப்பிவை
      எனப்பொரு மதக்கரி மருப்பி னிடையே
நெருப்பொடு நெருப்பெதிர் சுடர்ப்பொறி
     தெறித்தெழ நிழற்கொடி தழற்க துவவே.

     (பொ-நி.)   பொருப்பு  இவை  என  பொரு,  கரி  மருப்பினிடையே,
நெருப்பொடு எதிர் நெருப்பு, சுடர்ப்பொறி, தெறித்து எழ, கொடி, தழல் கதுவ;
(எ-று.)

     (வி-ம்.) மருப்பு-யானைத்தந்தம்.  பொருப்பு-மலை. கரி-யானை. கொடி-
கொடிச்சீலைகள்.  தழல்-தீ. கதுவ-பற்றிக்கொள்ள,  குருதி தோய்ந்த யானைத்
தந்தத்துக்கு  நெருப்பை  உவமையாக்குக.   யானைப்போரில்   தோன்றிய
நெருப்பால் கொடிச்சீலைகள் தீப்பற்றின என்க.                    (8)