துயிலெழுந்த நிலைகூறி விளித்தது

46. சொருகு கொந்தளகம் ஒருகை மேலலைய
     ஒருகை கீழலைசெய் துகிலொடே
திருவ னந்தலினும் முகம லர்ந்துவரு
   தெரிவை மீர்கடைகள் திறமினோ.

     (பொ-நி.) ஒரு  கை  மேல்,  அளகம்  அலைய,  ஒரு  கை  கீழ்,
துகிலொடே, அனந்தலினும் முகமலர்ந்துவரு தெரிவைமீர் திறமின்; (எ-று.)

     (வி-ம்.) சொருகு-முடிக்கப்படுகின்ற. கொந்து-பூங்கொத்து.  அளகம்-
கூந்தல்.  அலைசெய் - அலைபோல்  மடிந்து மடிந்து தோன்றும். துகில்-
உடை. அனந்தல் - தூங்கியெழுந்த  மயக்க நிலையிலும். தெரிவை-பெண்.
தூக்கம் தெளிந்ததும் ஒரு கை  மேலே கூந்தலைத் தாங்க, ஒரு கை கீழே
துகிலைத்   தாங்கி   எழுந்து   வந்தனர்   என்க.   இத்  தாழிசையின்
முதலடியிலமைந்துள்ள  கருத்து 'அகிலேந்து கூந்தல்,  ஒரு கையில் ஏந்தி
அசைந்தொரு  கை  துகிலேந்தி '  எனத்  தஞ்சைவாணன் கோவையினும்
வருதல் காண்க.                                            (26)