கலிங்கர் மாற்றுருக்கொண்டு கரந்தமை

466.வரைக்கலிங்கர் தமைச்சேர மாசை ஏற்றி
       வன்தூறு பறித்தமயிர்க் குறையும் வாங்கி
அரைக்கலிங்கம் உரிப்புண்ட கலிங்கர் எல்லாம்
      அமணரெனப் பிழைத்தாரும் அநேகர் ஆங்கே.

     (பொ-நி.)   மாசை   ஏற்றி,   மயிர்க்குறையும்   வாங்கி  கலிங்கம்
உரிப்புண்ட கலிங்கர்  எல்லாம்,  அமணர்  என,  பிழைத்தாரும்  அநேகர்;
(எ-று.)

     (வி-ம்.) வரை-மலை.  சேர-அடையும்படி.   மாசு-பழிச்சொல்.  தூறு
-புதர். ஓடுங்கால் புதர்கள் பற்றக் கலிங்கர் மயிர்க் குறை  எய்தினர்  என்க.
வாங்கி - களைந்து.    அரை - இடை.  கலிங்கம் - ஆடை.   உரிப்புண்ட
-களையப்பெற்ற.   கலிங்கர் - கலிங்க  வீரர்.  அமணர் - சமணர்.  என்று
-என்றுபொய்புகன்று.                                         (63)