குருதி வெள்ளத்தில் யானை மிதந்து சென்றமை

475. உடலின்மேல் பலகாயஞ் சொரிந்து பின்கால்
      உடன்பதைப்ப உதிரத்தே ஒழுகும் யானை
கடலின்மேல் கலந்தொடரப் பின்னே செல்லுங்
     கலம்போன்று தோன்றுவன காண்மின் காண்மின்.

     (பொ-நி.)   சொரிந்து,   பதைப்ப,  உதிரத்தே  ஒழுகும்  யானை,
கடலின்மேல்  கலம்போன்று  தோன்றுவன  காண்மின்!  (எ-று.)

     (வி-ம்.)  காயம்-புண்ணால்.  சொரிந்து-குருதியைச்  சொரிந்து. பின்
-உடலின்  பிற்பகுதி.  உதிரம்-குருதி.  ஒழுகுதல்-மிதந்து  செல்லல்.  கலம்
-மரக்கலம்.   யானைகள்   குருதி  வெள்ளத்தில்  ஒன்றன்பின்  ஒன்றாகச்
செல்வது, கடலின்மேற் செல்லும் மரக்கலங்கள் போன்றிருந்த தென்க.
(4)