வீரர் முகமலர்ந்து கிடந்தமை
 
477. விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண
       மேன்மேலும் முகமலரும் மேலோர் போலப்
பருந்தினமும் கழுகினமும் தாமே யுண்ணப்
      பதுமமுகம் மலர்ந்தாரைப் பார்மின் பார்மின்.

     (பொ-நி.)   விருந்தினரும்   வறிஞரும்  உண்ண,  முகம்  மலரும்
மேலோர் போல, பருந்தினமும்  கழுகினமும்  உண்ண,  முகமலர்ந்தாரைப்
பார்மின்! (எ-று.)

     (வி-ம்.)  வறியவர் - ஏழையர்.  நெருங்கி  உண்ண - அடுத்தடுத்து
உண்பதற்கு.   மேலோர்:  இல்லறத்   துயர்ந்தோர்.  பதுமாம்  - தாமரை.
மலர்ந்தார்-மலர்ச்சிகொண்ட போர்வீரர்: வினையாலணையும் பெயர்.
                                                           (6)