களத்தே வீழ்ந்து கிடக்கும் யானை இயல்பு | 479. | மாமழைபோல் பொழிகின்ற தானவாரி | | | மறுத்துவிழுங் கடகளிற்றை வெறுத்து வானோர் பூமழைமேல் பாய்ந்தெழுந்து நிரந்த வண்டு பொருட்பெண்டிர் போன்றமையும் காண்மின் காண்மின். |
(பொ-நி.) தானவாரி மறுத்து, கற்றை வெறுத்து, பூமழை மேல் நிரந்த வண்டு, பொருட்பெண்டிர் போன்றமை காண்மின்! (எ-று.) (வி-ம்.) தானம் - மதநீர். வாரி-பெருக்கு. மறுத்து-ஒழித்து. வானோர் -தேவர். பூமழை-கருணாகரன் வெற்றி கண்டு பொழிந்த பூமழை. நிரந்த -பரவிய. பொருட்பெண்டிர் - விலைமாதர். விலைமகளிர், ஒருவனிடம் செல்வமுள்ளவரையும் அவன்பால் அன்புற்றிருந்து, செல்வம் அற்றபோது அவனை நீத்துச் செல்வமுள்ள வேறொருவனைச் சேர்தல்போல, வண்டுகளும் யானைகள் உயிருடன் இருக்குமளவும் அதன் மதநீருண்ணக்காத்திருந்து அவ் யானைகள் இறந்ததும் தேவர்கள் தூற்றும் மலர் மழைகளிலுள்ள தேனை உண்பதற்குச் சார்ந்தன என்க. (8) |